ADDED : செப் 26, 2025 11:33 PM

சென்னை:சிறு, குறுந்தொழில் துவங்க தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனத்தின், 48 தொழிற்பேட்டைகளில், 401 தொழில்முனைவோருக்கு தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டையை, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர், கரூர் புஞ்சைகாலக்குறிச்சி உள்ளிட்ட புதிய மற்றும் ஏற்கனவே உள்ள என, மொத்தம், 60 தொழிற்பேட்டைகளில், 1,520 தொழில் மனைகளை ஒதுக்கீடு செய்வதற்கு, கடந்த ஜூலையில், 'சிட்கோ' நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த மனைகளை வாங்க, பலர் விண்ணப்பம் செய்தனர். அவர்களின் தொழில் உள்ளிட்டவை தொடர்பாக, சிட்கோ அதிகாரிகள் கடந்த மாதம் நேர்காணல் நடத்தினர்.
அதில் தேர்வான, 401 தொழில்முனைவோர் தொழில் துவங்க, 48 தொழிற்பேட்டைகளில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மனைகள், 15 சென்ட் முதல் ஒரு ஏக்கர் வரை ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்ற மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.