ADDED : செப் 27, 2026 04:02 AM

சென்னை: 'கார்பன்' வெளியேற்றத்தை அதிகரிக்காத தொழில் நிறுவனங்களுக்கு, 'நெட் ஜீரோ' தொழில் பூங்காவை, துாத்துக்குடி மாவட்டம் அல்லிக்குளத்தில், தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனம் அமைக்க உள்ளது.
தமிழகத்தில், தொழில் தொடங்கும் பெரிய நிறுவனங்களுக்கு சாலை, தண்ணீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, சிப்காட் எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது. அதன்படி, அந்நிறுவனம் துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளத்தில், 1,966 ஏக்கரில், தொழில் பூங்கா அமைக்கிறது.
இந்த தொழில் பூங்கா, கார்பன் வெளியேற்றத்தை அதிகரிக்காத தொழில் நிறுவனங்களுக்காக, ஆலைகளால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும், 'நெட் ஜீரோ' தொழில் பூங்காவாக அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அல்லிக்குளம் தொழில் பூங்காவுக்கு ஓரிரு வாரங்களில் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 'நெட் ஜீரோ' தொழில் பூங்காவாக அமைப்பதற்காக, அதன் கட்டமைப்பு பணிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதகம் இல்லாத வகையிலான வசதிகள் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும். அதற்கு ஏற்ப ஆலைகளை அமைக்கவும் தொழில் நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
