ADDED : டிச 10, 2024 07:26 AM

புதுடில்லி; உணவுப் பொருட்களில் சிறுதானிய பயன்பாடு மற்றும் மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கும் நோக்கில், சிறுதானியம் சார்ந்த பொருட்களுக்கு, ஐந்து ஆண்டுகால உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு 800 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜ்யசபாவில் தெரிவித்ததாவது:
சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை ஊக்குவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பி.எல்.ஐ.எஸ்.எம்.பி.பி., எனப்படும் சிறுதானியம் சார்ந்த பொருட்களுக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தை, மத்திய அரசு கடந்த 2023ம் நிதியாண்டு முதல் 2027ம் நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தும் வகையில் அறிமுகம் செய்தது.
விவசாயிகளுக்கு பலன்
ஆரம்பத்தில் 30 பயனாளிகள் இத்திட்டத்தில் பதிவு செய்திருந்தனர். பதிவை ஒருவர் திரும்ப பெற்றதையடுத்து, தற்போது இத்திட்டத்தில் 29 பயனாளிகள் உள்ளனர்.
திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, சிறுதானியங்கள் அடிப்படையிலான பொருட்கள் தயாரிப்பதில், உள்நாட்டில் இருந்து பெறப்படும் விவசாய பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இது உள்ளூர் உற்பத்தி மற்றும் விவசாய விளைபொருட்களின் கொள்முதல் ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. இதனால் விவசாயிகளும் பயன்அடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் முதல் செயல்திறன் ஆண்டுக்கான உரிமை கோரல்கள், மறு நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
உதாரணமாக 2022 - 23ம் நிதியாண்டுக்கான உரிமை கோரல்களை 2023 - 24ம் நிதியாண்டில் தாக்கல் செய்ய வேண்டும். 19 விண்ணப்பதாரர்கள் ஊக்கத் தொகை கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, இதுவரை கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய்ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
வாராந்திர சந்திப்பு
இத்திட்டத்தின் செயல்பாட்டை அதிகரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான இணையதளம், உடனடி சிக்கலை தீர்ப்பதற்கான பிரத்யேக குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
திட்டத்தை சுமுகமாக செயல்படுத்தும் வகையில், இக்குழுக்கள் வாயிலாக தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன.
வழக்கமான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகள் நிறுவப்பட்டுள்ளன. திட்ட வழிகாட்டுதல்களை எளிதில் புரிந்துகொள்ள வசதியாக, இதுகுறித்த விளக்கங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
மேலும், திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கண்காணிப்பை உறுதி செய்ய, விண்ணப்பதாரர்களுடன் வாராந்திர சந்திப்புகளும் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
