ADDED : பிப் 06, 2026 01:11 AM

சென்னை: தமிழகத்தில், 10 மெகா வாட் வரை சிறிய நீர் மின் நிலையங்கள் அமைக்க, தனியார் நிறுவனங்களுக்கு, மின் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
மின் வாரியம் சார்பில், 2,324 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதால், நீர் மின் திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, கடந்த 2024ல் சிறிய நீர் மின் திட்ட கொள்கையை, அரசு வெளியிட்டது.
இதன்படி, தனியார் நிறுவனங்கள் தாங்கள் தேர்வு செய்யும் இடத்தில் குறைந்தது, 100 கிலோ வாட் முதல், அதிகபட்சம் 10 மெகா வாட் வரை மின் நிலையம் அமைக்கலாம்.
இதற்கான அனுமதியை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் வழங்குகிறது. தனியார் மின் நிலையத்தில் இருந்து, மின்சாரத்தையும் வாங்குகிறது.
தற்போது, நீர் மின் நிலையம் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்கும் இடங்களில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்து, மின் நிலையம் அமைக்க அனுமதிக்கப்படும்.

