ADDED : ஆக 31, 2025 01:18 AM

சென்னை:துா த்துக்குடி மாவட்டத்தில் விண்வெளி பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகர் வேண்டி, தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் டெண்டர் வெளியிட்டு உள்ளது.
துாத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன் ஒரு பகுதியாக அல்லிக்குளம் பகுதியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில், விண்வெளி தொழில்நுட்ப வசதி மையம் அமைக்கப்பட உள்ளதாக, டிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்துாரி தெரிவித்துள்ளார். இந்த மையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகர் வேண்டி, தற்போது டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மையம் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை மேம்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு, சோதனை மற்றும் உற்பத்தி வசதிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி வாரியான முதலீடுகள், பல்வேறு வகையான நிதி ஆதாரங்கள் மற்றும் நிலைத்தன்மை நடவடிக்கைகள் குறித்து ஆலோசகர்கள் அறிக்கை தயாரித்து வழங்க வேண்டும் என்றும், இதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.