'ஆடை ஏற்றுமதி இலக்கை எட்ட சிறப்பு திட்டம் உதவும்'
'ஆடை ஏற்றுமதி இலக்கை எட்ட சிறப்பு திட்டம் உதவும்'
ADDED : ஆக 01, 2026 06:30 AM

திருப்பூர்: 'முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு திட்டத்தால், மாறி வரும் பேஷன் எதிர்பார்ப்புகளை விரைந்து பூர்த்தி செய்ய முடியும்' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி.. தெரிவித்துள்ளது.
டில்லியில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் ஆய்வு கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது: முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு திட்டம், ஆடை ஏற்றுமதியாளர்கள் உயர்தர துணிகளை எளிதாக இறக்குமதி செய்ய வழிவகுக்கும். இதன் மூலம் உலகளாவிய வர்த்தகர்களின் தேவைகளையும், மாறி வரும் பேஷன் எதிர்பார்ப்புகளையும் விரைந்து பூர்த்தி செய்ய முடியும்.
திட்டம் நடைமுறைக்கு வரும்போது, இந்திய ஆடை துறையின் உலகளாவிய போட்டித்தன்மை உயர்வதுடன், சர்வதேச அளவில் இந்தியாவின் நிலையும் வலுப்பெறும்.
மேலும், இது நாட்டின் ஏற்றுமதி இலக்கை அடைய ஊக்கமாகவும், உற்பத்தித் திறனை அதிகரித்து மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவிக்கவும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
தொழில்முறை பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட்டு, புதிய சந்தைகள் உருவாக்கம், புத்தாக்கத் தயாரிப்பு ஆகியவற்றின் வாயிலாக ஏற்றுமதி இலக்குகளை அடைய ஏ.இ.பி.சி., உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
