ADDED : ஜூலை 23, 2025 10:39 PM

புதுடில்லி:ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் 1,323 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி, கல் ஏர்வேஸ் சார்பில், கலாநிதி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த அஜய் சிங், மற்றொரு பங்குதாரராக கலாநிதிக்கு வழங்க வேண்டியஇழப்பீடு தொகையை திருப்பி செலுத்தாததன் காரணமாக, கலாநிதி சார்பில் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதில் பல்வேறு உத்தரவுகள் பல காலகட்டங்களில் வழங்கப்பட்டன.
இவற்றில், கடந்த 2018ம் ஆண்டு நடுவர் மன்றத்தில் 579 கோடி ரூபாயை வட்டியுடன் கலாநிதிக்கு அஜய் சிங் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக அஜய் சிங் சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதே நேரத்தில் இழப்பீட்டிற்கான தொகையாக 1,323 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி, கலாநிதி தொடர்ந்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக கலாநிதியின் கல் ஏர்வேஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீது நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் நரசிம்மா மற்றும் சந்துருகர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் டில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்வதாக அறிவித்தனர்.