ADDED : செப் 03, 2026 06:42 AM
புதுடில்லி: தனிநபர் திவால் வழக்கை விசாரிக்க, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அமைத்த ஐந்து உறுப்பினர் அமர்வுக்கு, எஸ்ஸெல் குழும தலைவர் சுபாஷ் சந்திரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எஸ்ஸெல் குழும நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கு, அதன் தலைவர் சுபாஷ் சந்திரா தனிநபர் உத்தரவாதம் அளித்திருந்தார். அந்த கடன்கள் தொடர்பாக, கடனாளர்கள் கிட்டத்தட்ட 22,000 கோடி ரூபாய் கோரியதை தொடர்ந்து, சந்திராவுக்கு எதிராக திவால் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதை விசாரித்த 2 நபர் அமர்வின் மாறுபட்ட தீர்ப்பால், நியமிக்கப்பட்ட மூன்றாம் உறுப்பினர் நிலேஷ் சர்மா, சந்திராவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். இந்நிலையில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஐந்து உறுப்பினர் அமர்வை அமைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்திரா தரப்பு, ஐந்து உறுப்பினர் அமர்வை அமைக்க தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வாதிட்டது.
