ADDED : நவ 06, 2025 12:04 AM

புதுடில்லி: 'நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டில் 16 சதவீதம் அதிகரித்து, 343.50 லட்சம் டன்னாக உயர வாய்ப்புள்ளது' என , 'இஸ்மா' எனும் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் கணித்துள்ளது.
சர்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு என்பது அக்டோபரில் துவங்கி செப்டம்பரில் முடிவடையும். கடந்த ஆண்டில், மொத்த சர்க்கரை உற்பத்தி, 296.10 லட்சம் டன்னாக இருந்தது. இதில், மஹாராஷ்டிராவின் பங்களிப்பு 93.51 லட்சம் டன்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் கரும்பு பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பால், அம்மாநில சர்க்கரை உற்பத்தி, 130 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எத்தனால் உற்பத்திக்கு 34 லட்சம் டன் ஒதுக்கீடு போக, சர்க்கரை உற்பத்தி 261.08 லட்சம் டன்னில் இருந்து, 309.50 லட்சம் டன்னாக அதிகரிக்கக் கூடும். ஆரம்ப கையிருப்பு 50 லட்சம் டன் என கணக்கிட்டால், இந்தாண்டு 359.50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

