ADDED : பிப் 08, 2024 01:09 AM

புதுடில்லி:'டாடா ஸ்டீல்' நிறுவனம், அதன் ஐந்து துணை நிறுவனங்களை தன்னுடன் இணைக்கும் பணி முடிவுற்றதாக அறிவித்துள்ளது. மேலும், மற்றொரு துணை நிறுவனமான டி.ஆர்.எப்., நிறுவனத்தை இணைக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில், டாடா ஸ்டீல் நிறுவனம், அதன் வணிக செயல்பாடுகளை எளிதாக்கும் நோக்குடன், அதன் ஒன்பது துணை நிறுவனங்களை இணைக்க உள்ளதாக அறிவித்தது.
இவற்றில், 'டாடா ஸ்டீல் மைனிங், டாடா ஸ்டீல் லாங் பிராடக்ட்ஸ், எஸ் அண்டு டி., மைனிங் கம்பெனி, தி டின்பிளேட் கம்பெனி ஆப் இந்தியா, டாடா மெட்டாலிக்ஸ்' ஆகிய ஐந்து நிறுவனங்களை இணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும், 'புவனேஸ்வர் பவர், அங்குல் எனர்ஜி, இந்தியன் ஸ்டீல் அண்டு ஒயர் புராடெக்ட்ஸ்' ஆகிய மூன்று நிறுவனங்களை இணைக்கும் பணி, அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

