தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எளிதாகிறது வரி செலுத்தும் முறை

 எளிதாகிறது வரி செலுத்தும் முறை

 எளிதாகிறது வரி செலுத்தும் முறை


ADDED : பிப் 02, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 04:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், வரி விகிதங்களில் பெரிய மாற்றங்களை செய்யாமல், வரி செலுத்தும் முறையை எளிதாக்குவதற்கும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான முக்கிய மாற்றங்கள்

தனிநபர் வருமான வரி அடுக்குகளிலோ, கார்ப்பரேட் வரி விகிதங்களிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வரி முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் சொத்து களுக்கு விதிக்கப்பட்ட 60 சதவீத வரி, இப்போது 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்கள் தாமாக முன்வந்து வருமானத்தை வெளிப்படுத்த ஊக்கமளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து வீடு அல்லது நிலம் வாங்குபவர்கள், இனி இதற்காக தனியாக 'டேன்' எண் எடுக்க தேவையில்லை. வாங்குபவர் தனது பான் கார்டு எண்ணை பயன்படுத்தியே வரி செலுத்தலாம்.

தணிக்கை செய்ய தேவையில்லாத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31ல் இருந்து ஆகஸ்ட் 31ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி படிவத்தில் உள்ள பிழைகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., தொகையை செலுத்தினால், முதலாளிகள் அதற்கான வரி விலக்கை பெறலாம். இது, உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் வழக்குகளுக்கு தீர்வாக அமையும்.

வரி விலக்குகள்

வாகன விபத்து இழப்பீட்டு தொகைக்கான வட்டிக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவ படையில் பணியாற்றி, உடல்நலக்குறைவால் பணியிலிருந்து விலகுபவர்களுக்கு வழங்கப்படும் 'ஊனமுற்றோர் ஓய்வூதியத்துக்கு' வரி கிடையாது.

சிறு அளவிலான வெளிநாட்டு சொத்துக்களை (ரூ.20 லட்சம் வரை) தெரியாமல் வெளிப்படுத்த தவறியவர்களுக்கு அபராத நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 17 வகை புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

மேலும், 7 வகையான அரிய நோய்களுக்கான மருந்துகளையும், சிறப்பு மருத்துவ உணவுகளையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு இந்தியாவில் இருந்து பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படும் டி.சி.எஸ்., வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மறைமுக வரியின் தாக்கங்கள்

ஜி.எஸ்.டி., விகிதங்களில் மாற்றங்கள் இல்லை என்றாலும், சுங்க வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சில துறைகளுக்கு பெரும் பலனைத் தரும்.

லித்தியம் - அயன் பேட்டரி தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் சோலார் கண்ணாடி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களுக்கு சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார பைக், மின்சார கார் மற்றும் சோலார் பேனல்களின் உற்பத்தி செலவு குறையும்.

உள்நாட்டிலேயே விமான பாகங்களை தயாரிப்பதற்கும், பாதுகாப்பு படை விமானங்களை பழுதுபார்ப்பதற்கும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு வரி கிடையாது. இது இந்தியாவை விமான பராமரிப்பு மையமாக மாற்ற உதவும்.

மேம்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பசுமை எரிசக்தி உபகரணங்களுக்கான மூலப்பொருள் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் வரியை குறைப்பதை விட, வரி செலுத்தும் முறையை எளிதாக்குவதையும், தேவையற்ற நீதிமன்ற வழக்குகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு துறையில் இந்தியாவின் சுயசார்பு நிலையை மேம்படுத்த வழிவகை செய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us