விமானிகளுக்கான பயிற்சி நிலையம் கோவில்பட்டியில் அமைக்க டெண்டர்
விமானிகளுக்கான பயிற்சி நிலையம் கோவில்பட்டியில் அமைக்க டெண்டர்
ADDED : செப் 27, 2024 10:41 PM

சென்னை:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், விமான பைலட் ஆவதற்கான பயிற்சி நிலையம் அமைப்பதற்காக, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கவும்; விமான ஓடுதள பாதையை மேம்படுத்தும் பணியை கண்காணிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யவும், தமிழக அரசின் 'டிட்கோ' நிறுவனம் 'டெண்டர்' கோரியுள்ளது.
மத்திய அரசு, சிறிய நகரங்களிலும் விமான போக்குவரத்து சேவையை துவக்க, புதிதாக விமான நிலையங்களை அமைத்து வருகிறது. இதனால், விமானிகளின் தேவை அதிகரித்துள்ளது.
அதேசமயம், விமானிகளுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்கக்கூடிய விமான பயிற்சி நிறுவனங்கள் உள்நாட்டில் குறைவாகவே உள்ளன.
இதனால், விமானி பயிற்சி பெற, பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். தலா ஒருவர், 50 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை இதற்காக செலவு செய்கின்றனர். இதனால், தமிழகத்தில் விமான பயிற்சி நிறுவனங்ளை துவக்க, 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதலாவது விமான பயிற்சி நிலையம் கோவில்பட்டியில் அமைக்கப்பட உள்ளது. அங்கு, 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் உள்ள விமான ஓடுபாதை புதுப்பிக்கப்பட்டு, விமான பயிற்சி வழங்க தகுதியான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப் பட உள்ளது.
விமான பயிற்சி நிலையத்திற்காக, 'மாஸ்டர் பிளான்' எனப்படும் திட்ட முழு அறிக்கையை தயாரித்து வழங்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, நேற்று டிட்கோ டெண்டர் வெளியிட்டுள்ளது.
கோவில்பட்டி விமான பயிற்சி நிலையம் வாயிலாக ஆண்டுக்கு, 200 விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவும், அதன் வாயிலாக வேலைவாய்ப்பை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் டிட்கோ திட்டமிட்டுள்ளது.