ADDED : மார் 06, 2026 01:27 AM

சென்னை கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,000 மெகா வாட் திறனில் வெள்ளிமலை நீரேற்று மின் நிலைய கட்டுமான பணிகளை துவக்குவதற்கு கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய தமிழக பசுமை எரிசக்தி கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது.
தமிழக மின் வாரியத்துக்கு, 2,341 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. இதில், கோவை காடம்பாறையில் மட்டும், 400 மெகா வாட் திறனில் நீரேற்று மின் நிலையம் உள்ளது.
தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம், மாநிலம் முழுதும் பொது - தனியார் கூட்டு முயற்சியில், 14,500 மெகா வாட் திறனில், 15 நீரேற்று மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
கன்னியாகுமரி வெள்ளிமலையில் தலா, 250 மெகா வாட் திறனில் நான்கு அலகுகள் என, மொத்தம், 1,000 மெகா வாட் திறனில் நீரேற்று மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்ட செலவு, 5,624 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் நிலையத்தை, 'கட்டமைத்தல், சொந்தமாக இயக்குதல், அரசிடம் திரும்ப ஒப்படைத்தல்' முறையில் செயல்படுத்த கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, பசுமை எரிசக்தி கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது.

