பஞ்சு இறக்குமதிக்கான வரி சலுகையை மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் ஜவுளி தொழில்துறையினர் வலியுறுத்தல்
பஞ்சு இறக்குமதிக்கான வரி சலுகையை மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் ஜவுளி தொழில்துறையினர் வலியுறுத்தல்
ADDED : ஜன 05, 2026 01:24 AM

திருப்பூர்: ''கொள்முதல் செய்து கப்பலில் வந்து கொண்டிருக்கும் பஞ்சு இறக்குமதிக்கு, 11 சதவீதம் வரி செலுத்த நேரிடும் என்பதால், வரிவிலக்கு சலுகையை மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும்'' என, ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த பருத்தி ஆண்டில் (2024 செப்., - 2025 அக்.,) எதிர்பார்த்த அளவு பருத்தி மகசூல் கிடைக்கவில்லை; 301 லட்சம் பேல் (ஒரு பேல் - 170 கிலோ) பஞ்சு கிடைக்கும் என்று கணக்கிட்டிருந்த நிலையில், 297 லட்சம் பேல்கள் மட்டுமே கிடைத்தன.
எப்படியும், பஞ்சு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், செயற்கையான விலை உயர்வை தடுக்க, பஞ்சு இறக்குமதி வரியில் இருந்து விலக்களிக்க வேண்டுமென, தொழில்துறையினர் கோரிக்கைவிடுத்தனர்.
மத்திய அரசும், கடந்த, ஆக., துவங்கி டிச., 31 வரை, பஞ்சு இறக்குமதிக்கான வரி 11 சதவீதத்தில் இருந்து விலக்கு அளித்தது. கடந்த பருத்தி ஆண்டில், 41.40 லட்சம் பேல்கள் பஞ்சு இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த சீசனில், 40 லட்சம் பேல் இறக்குமதி ஆகுமென கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், துருக்கியில் இருந்து, பஞ்சு இறக்குமதி செய்வதற்கான முயற்சியை இத்துறையினர் துவக்கினர்.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''இறக்குமதி வரி சலுகையுடன், பஞ்சு இறக்குமதி செய்ய திட்டமிட்டு, அமெரிக்கா, பிரேசிலில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது. இருப்பினும், பெரும்பாலானவர்களுக்கு வந்து சேரவில்லை. இனிமேல் பஞ்சு இறக்குமதி செய்தால், 11 சதவீதம் வரி செலுத்த நேரிடும்.
''கப்பலில் வந்து கொண்டிருக்கும் பஞ்சு வந்து சேரும் வரை வரிவிலக்கு அவசியம். எனவே, பஞ்சு இறக்குமதி வரி விலக்கு சலுகையை மேலும் மூன்று மாதங்களாவது நீட்டிக்க வேண்டும்.
''அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரோக்கியமாக தொடர, அந்நாட்டு பஞ்சுக்காவது வரிவிலக்கு தொடர வேண்டும்,'' என்றார்.

