UPDATED : அக் 12, 2026 07:11 PM
ADDED : அக் 12, 2026 07:06 PM
கோவை: தமிழக தோட்ட தொழில் துறை, பல்வேறு அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதால், தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக தமிழ்நாடு தோட்டத்தொழிலதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், கேரளா, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களை போன்று, தமிழகத்திலும் தோட்ட தொழில் துறையை தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என சங்கம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
சங்க தலைவர் வினோதன் கந்தையா கூறியதாவது:
தோட்ட தொழில் துறை, தொழிலாளர் நலன், வனம், வருவாய், பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புபட்டு செயல்பட வேண்டியுள்ளது. இதனால், ஒரே பிரச்னைக்கு பல துறைகளின் அனுமதி மற்றும் தலையீடு தேவைப்படும் நிலை ஏற்படுகிறது.
மத்திய அரசு அளவில் தோட்ட தொழிலின் வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பான கட்டுப்பாடுகள் தெளிவாக உள்ளன. ஆனால், மாநில அளவில் எந்த துறை முதன்மை நிர்வாக பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது. கேரளாவில் தொழில் துறையின் கீழ் தனி தோட்ட தொழில் இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்கம், அசாம் போன்ற தோட்ட தொழில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களிலும் இந்த துறை தொழில் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இதேபோன்ற தனி நிர்வாக அமைப்பை தமிழகத்திலும் உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஏன் மாற்றம் கோரப்படுகிறது?
தோட்ட தொழில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் செயல்படுகிறது
ஒருங்கிணைந்த நிர்வாக கட்டுப்பாடு இல்லை
பிரச்னைகளுக்கு தீர்வு காண பல துறைகளை அணுக வேண்டிய நிலை
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தனி நிர்வாக அமைப்பு செயல்படுகிறது
