‘வெடிக்க’ தொடங்கிய பட்டாசு விலை 30–50 சதவீதம் வரை உயர வாய்ப்பு
‘வெடிக்க’ தொடங்கிய பட்டாசு விலை 30–50 சதவீதம் வரை உயர வாய்ப்பு
UPDATED : அக் 16, 2026 02:56 PM
ADDED : அக் 16, 2026 02:54 PM

சென்னை: மூலப்பொருட்கள், பேக்கேஜிங் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், தீபாவளிக்கு பட்டாசு விலை வகைகளை பொறுத்து 30 முதல் 50 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பட்டாசு உற்பத்தியில் கிட்டத்தட்ட 90 சதவீத பங்களிப்பை வழங்கும் சிவகாசியில், ரசாயன மூலப்பொருட்களின் விலை உயர்வு உற்பத்தி செலவை கடுமையாக பாதித்துள்ளது. அங்கு 1,070 உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், இத்துறையின் ஆண்டு வர்த்தகம் கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாயாக உள்ளது.
மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, கப்பல் போக்குவரத்தில் தாமதம் மற்றும் தேவை–வினியோக இடைவெளியால், பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பல்வேறு ரசாயனங்களின் விலை உயர்ந்துள்ளதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.
குறிப்பாக, முக்கிய மூலப்பொருளான சல்பர் விலை கிலோ 75 ரூபாயில் இருந்து 140 ரூபாய் வரை உயர்ந்த பின்னர், 100 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. அலுமினியம், சோடியம் நைட்ரேட் மற்றும் சால்ட்பீட்டர் விலையும் அதிகரித்துள்ளதது. மேலும் ராசரியாக மூலப்பொருள் செலவு மட்டும் கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரசாயனங்கள் மட்டுமின்றி, காகிதம், டூப்ளக்ஸ் போர்டு, நூல், லேபிள் உள்ளிட்ட பேக்கேஜிங் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளதால், உற்பத்தியாளர்களின் லாப விகிதம் பாதிக்கப்பட்டு, அதன் தாக்கம் இறுதி விலையிலும் எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், சில பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் சந்தையில் வினியோகம் குறைந்துள்ளதாகவும், அதேநேரம் இந்த ஆண்டு தேவை அதிகரித்துள்ளதால் வழக்கமாக வழங்கப்படும் தள்ளுபடிகளும் குறையக்கூடும் என்றும் தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சீசனுக்கான திட்டமிட்ட உற்பத்தியில் கிட்டத்தட்ட 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘செலவு உயர்வு விலையில் எதிரொலிக்கும்’
“மூலப்பொருட்களின் விலை உயர்வால் பட்டாசு விலை, வகையை பொறுத்து 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காகிதம், டூப்ளக்ஸ் போர்டு, நூல், லேபிள் உள்ளிட்ட பிற உற்பத்தி செலவுகளும் உயர்ந்துள்ளன.”
- ஜே.தமிழ்செல்வன், தலைவர், இந்திய பட்டாசு சங்கம்
