கடன் செயலிகளை நாடும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
கடன் செயலிகளை நாடும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
ADDED : ஆக 24, 2025 09:16 PM

அவசரத் தேவைக்காக டிஜிட்டல் கடன் செயலிகளை நாடுவதாக இருந்தால் அவை நம்பகமானவை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
கடன் வசதிக்காக வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களை மட்டுமே நாட வேண்டிய நிலை மாறியிருக்கிறது. இப்போது டிஜிட்டல் முறையில் கடன் பெறும் வசதி அதிகரித்துள்ளது. டிஜிட்டல் செயலிகள் உடனடியாகவும், எளிதாகவும் கடன் பெற வழி செய்கின்றன.
எனினும் டிஜிட்டல் கடன் பிரிவில் மோசடி செயலிகளும் அதிகம் உள்ளதால், பயனாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். தனிநபர் கடன் தேவைப்படும் போது, டிஜிட்டல் கடன் செயலிகளை நாடுவது எளிதாக இருந்தாலும், அவை நம்பகமானவை மற்றும் பாதுகாப்பானவை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சட்டப்பூர்வ செயலிகள்
டிஜிட்டல் கடன் செயலிகளை நெறிப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே கடன் பெறும் போது, முதலில் அந்த செயலி ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
அதாவது அந்த செயலி, அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது வங்கிசாரா நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இத்தகைய செயலிகள் ரிசர்வ் வங்கி நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுபவை. வங்கிகளுடன் தொடர்பு கொண்ட பாதுகாப்பான டிஜிட்டல் கடன் செயலிகள் பட்டியலையும் ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் பராமரித்து வருகிறது.
முறையான அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வதோடு, தரவிறக்கம் செய்யும் போது செயலி தொடர்பான பயனாளிகள் கருத்துகளையும் படித்துப்பார்க்க வேண்டும். சக பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துகள், விமர்சனங்கள் மூலம் செயலியின் செயல்பாடு குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் கடன் செயலி நிறுவனத்தின் பின்னணி மற்றும் முதலீட்டாளர் விபரங்களையும் கவனிக்க வேண்டும். நம்பகமான நிறுவனங்களை பின்புலமாக கொண்டிருந்தால் நல்லது.
வட்டி விகிதம்
டிஜிட்டல் கடன் செயலியின் நம்பகத்தன்மையை ஆராய்ந்த பிறகு கடனுக்கான விதிகள், நிபந்தனைகளை கவனமாக படித்துப்பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். தொடர்புடைய கட்டணங்கள், தவணை விபரம், அபராதங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். உடனடி கடன்கள் அதிக வட்டி விகிதம் கொண்டிருப்பதோடு மறைமுக கட்டணங்களும் இருக்கலாம்.
கையெழுத்திடுவதற்கு முன், நிபந்தனைகள் உணர்த்தும் அம்சங்கள் குறித்த தெளிவு இருக்க வேண்டும். மேலும் செயலிகள் சேகரிக்கும் தரவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். எந்த வகையான தரவுகள் கேட்கப்படுகின்றன, அவை தேவையானவை தானா? என்பதையும் பார்க்க வேண்டும்.
பல செயலிகள், புகைப்படம், தனிப்பட்ட தகவல்கள் என பலவித தரவுகளை சேகரிப்பது பயனாளிகள் தனியுரிமையை பாதிக்கலாம். எனவே தரவுகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனியுரிமை பாதுகாப்பு அம்சங்கள் செயலிகளின் தன்மையையும் உணர்த்தும் வகையில் அமைவதை மனதில் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேல், பொறுப்பாக கடன் வாங்க வேண்டும். அதாவது, திரும்பி செலுத்தும் அளவுக்கு உட்பட்டே கடன் வாங்க வேண்டும். எளிதாக கிடைக்கிறது என்பதற்காக தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திண்டாட வேண்டியிருக்கும். நிதி தேவை மற்றும் நிதி சூழல் ஆகிய அம்சங்களை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.