ADDED : செப் 30, 2026 01:40 AM

சென்னை: நிதி சார்ந்த நிறுவனங் களின் முதலீட்டை ஈர்க்க கோவையில், 400 கோடி ரூபாயில் டிஜிட்டல் நிதிநுட்ப மையம் அமைப்பதற்காக தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு செய்ய தமிழக அரசின் 'டிட்கோ', நிறுவனங்களிடம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழகத்தில் நிதி, காப்பீடு, வங்கி ஆகியவற்றை உள்ளடக்கிய நிதி துறையை சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், 'பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிநுட்ப நகரை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.
அங்கு, நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிதிநுட்ப கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இது, கடந்த மார்ச்சில் செயல்பாட்டிற்கு வந்தது. அங்கு நிதி சார்ந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன.
'கோவையில் நிதி தொழில்நுட்ப புதுமைகளுடன் டிஜிட்டல் நிதி சேவைகளை உருவாக்கும் நோக்கில் டிஜிட்டல் நிதி மையம், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்' என, முதல்வர் விஜய் சட்டசபையில் சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து, கோவையில் இந்த மையத்தை அமைப்பதற்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டிட்கோ' நிறுவனம் டெண்டர் கோரியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
