ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் நனவாகிறது 'பிராண்டு' கனவு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் நனவாகிறது 'பிராண்டு' கனவு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை
UPDATED : ஜன 03, 2026 04:30 AM
ADDED : ஜன 03, 2026 03:07 AM

திருப்பூர்: சொந்தமாக 'பிராண்டு' உருவாக்க வேண்டும் என்ற இந்திய ஆடை உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கைகூடி வருவதாக அத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டில் இருந்து, ஆண்டுக்கு, 1.35 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நடந்து வருகிறது. நமக்கென்று சொந்தமாக 'பிராண்டு' உருவாக்கி, சர்வதேச சந்தைகளில் கூடுதல் வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும் என்பது, இன்றைய இளம் தொழில் முனைவோரின் இலக்கு.
![]() |
ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை, தொழில்நுட்ப வளர்ச்சி, வேகம் பெற்று வருகிறது.
அதன் வாயிலாக, புதிய 'பிராண்டு' உருவாக்குவதும் எளிதாகுமென, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த, மூன்று மாதங்களாக, பேஷன் டிசைனிங், 'மாடலிங்' போன்ற பணிகள் மிகவும் எளிதாகி விட்டன. அதாவது, 45 நாட்கள் வரை நடந்து வந்த 'டிசைனிங்' பணியை, 90 சதவீதம் குறைவான செலவில் இரண்டே நாட்களில் செய்யலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தினால், சொந்தமாக 'பிராண்டு' உருவாக்கும் திருப்பூரின் முயற்சி, மிக விரைவில் கைகூடும் என்று, ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளம் தலைமுறை பிரிவின் துணை தலைவர் சரண்ராஜ் கூறியதாவது:
ஏ.ஐ.,தொழில்நுட்பத்தை சரியான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த மூன்று மாதமாக, 'பேஷன் டிசைன்' சாம்பிள் ஆடை ஒப்புதல் பெறுவது போன்ற பணிகளை, மும்பை, பெங்களூருவை சார்ந்திருக்காமல், திருப்பூரிலேயே விரைந்து முடிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் கைகொடுக்கிறது.
படிப்படியாக உற்பத்தி பிரிவிலும், தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்வதற்கு வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளித்து, தரமான உற்பத்தியை வேகப்படுத்தவும், ஏ.ஐ., தொழில்நுட்பம் கைகொடுக்கும்.
குறிப்பாக, சொந்தமான 'பிராண்டு' உருவாக்கும் முயற்சியில் கைமேல் பயனளிக்கும்; அதுவும், இந்த ஆண்டிலேயே, திருப்பூருக்கு அது சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
45 நாட்கள் வரை நடந்து வந்த ஆடை 'டிசைனிங்' பணியை, 90 சதவீதம் குறைவான செலவில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இரண்டே நாட்களில் செய்யலாம் என்று நிரூபணம்


