சீனாவை பார்வையிட செல்லும் திருப்பூர் தொழில்துறையினர்
சீனாவை பார்வையிட செல்லும் திருப்பூர் தொழில்துறையினர்
ADDED : செப் 01, 2026 04:00 AM
திருப்பூர்: சீனாவில் உள்ள தங்கள் 'ஏஐ - ஆட்டோமேஷன்' தொழிற்சா லையை பார்வையிட, தொழில்துறையினரை இலவசமாக அழைத்து செல்லும் திட்டத்தை அந்நாட்டு நிறுவனமான 'ஜேக்' துவக்கி உள்ளது.
ஆடை உற்பத்தி நிறுவனங்களில் நவீன ஆட்டோமேஷன் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக தொழிலாளர் தேவை குறைவதுடன், உற்பத்தி 30 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சீனாவை சேர்ந்த 'ஜேக்' நிறுவனம், உலகம் முழுவதும் ஆடை உற்பத்திக்கு தேவையான ஆட்டோமேஷன் இயந்திரங்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில், ஆட்டோமேஷன் இயந்திரங்களை நிறுவ தயாராக உள்ள தொழில்துறையினரை இலவசமாக சீனா அழைத்து சென்று, தொழிற்சாலையை நேரில் பார்வையிட ஏற்பாடு செய்து வருகிறது.
'ஜேக்' நிறுவனத்தின் தமிழகத்துக்கான ஏஜென்ட் சேதுபதி கூறுகையில், ''தற்போதைய போட்டியில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளித்து, உற்பத்தியை விரைவாக உயர்த்த வேண்டியது கட்டாயம்.
''அதற்காக அனைத்து வகையான ஆடை உற்பத்தி நிறுவனங்களும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்துக்கு மாறி வருகின்றன.
''நவீன இயந்திரங்களை நிறுவ தயாராக உள்ள நிறுவன பிரதிநிதிகளை இலவசமாக சீனா அழைத்துச் சென்று, இயந்திர உற்பத்தியை நேரில் விளக்கி, பார்வையிட ஏற்பாடு செய்கிறோம்'' என்றார்.
