வரி விதிப்பை சமாளிக்க 'திருப்பூர் ஒரிஜினல்ஸ்' பிராண்ட்
வரி விதிப்பை சமாளிக்க 'திருப்பூர் ஒரிஜினல்ஸ்' பிராண்ட்
ADDED : ஆக 09, 2025 11:49 PM

திருப்பூர்:“திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், 'திருப்பூர் ஒரிஜினல்ஸ்' என்ற பிராண்டை உருவாக்கி, அமெரிக்க சந்தைகளில் நேரடியாக நுழையலாம்'' என, 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேவிட் கூறினார்.
அவர் கூறியதாவது:
தனியாக சாதிக்க முடியாததை, கூட்டு இயக்கமாக செயல்படுத்த முடியும். குறிப்பாக, இடைத்தரகர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் பின்னலாடைகள், அமெரிக்காவில் 300 சதவீதம் வரை விலை உயர்த்தி விற்கப்படுகிறது.
இடைத்தரகர்களைத் தவிர்த்தால், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பையும் எதிர்கொண்டு, தற்போது தரும் விலையை விட 30 சதவீதம் வரை குறைத்துக்கூட, ஆடைகளை விற்பனை செய்யும் சூழல் ஏற்படும்.
திருப்பூரின் தரம் மற்றும் கைவினை திறனுக்காக, அமெரிக்க சந்தை காத்திருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு பிரகாசமான எதிர்காலத்தை கட்டமைக்கலாம்.
அமெரிக்காவில், விற்பனை மற்றும் வினியோக அலுவலகத்தை அமைத்து, 'ஆன்லைன்' வர்த்தகம் செய்வதன் வாயிலாக, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியையும் ஊக்குவிக்க இயலும். மேலும் பருத்தி ஆடைகள், உயர்தர விளையாட்டு ஆடை, குழந்தைகளுக்கான ஆடை, சீருடைகள் என, திருப்பூரின் சிறப்புகளை கொண்டு சேர்க்கலாம். அமெரிக்க 'இ - காமர்ஸ்' தளங்களிலும், பிராண்டை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.