கனடாவுடன் மீண்டும் துளிர்க்கும் வர்த்தக ஒப்பந்த பேச்சு
கனடாவுடன் மீண்டும் துளிர்க்கும் வர்த்தக ஒப்பந்த பேச்சு
ADDED : நவ 25, 2025 01:00 AM

புதுடில்லி: இந்தியாவும், கனடாவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை மீண்டும் துவங்க முடிவு செய்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற ஜி - 20 உச்சி மாநாட்டில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்து பேசிய போது, இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து டில்லியில், இந்தியா - கனடா வணிக கூட்டமைப்பினர் இடையே அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:
தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுகளை மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை 4.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இருதரப்பு உறவு கடந்த 2023ல் மோசமடைந்த நிலையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுகளை கனடா நிறுத்தியது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடந்த ஜூன் மாதம் கனடாவில் நடைபெற்ற ஜி - 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.
அழைப்பை ஏற்று கனடா சென்ற பிரதமர், மார்க் கார்னியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவு மறுமலர்ச்சி அடைய இந்த சந்திப்பு வழிவகுத்தது.

