ADDED : ஏப் 12, 2025 01:01 AM

சி.பி.300 ஆர் பைக்குகள் ஹோண்டா திரும்ப அழைப்பு
சி.பி.300 ஆர் பைக்குகளில் ஹெட்லைட்டில் உள்ளே பி.சி.பி., அமைப்பில் சிக்கல் இருப்பதை ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் சமீபத்தில் கண்டறிந்தது. இதனையடுத்து, கடந்த 2018 முதல் 2020ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட சி.பி.300ஆர் மாடல் பைக்குகளை இலவசமாக சரி செய்து தர இருப்பதாகவும் இத்திட்டத்தின் கீழ் வரும் வாகனங்களை, ஹோண்டா பிக் விங் இணையதளத்தில், தனிப்பட்ட வாகன அடையாள எண்ணை அளித்து, வாடிக்கையாளர்கள் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளது.
==
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி 70% ஆக அதிகரிப்பு
இந்தியாவின் மதிப்பு கூட்டப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அடுத்த நிதியாண்டுக்குள் இது 90 சதவீதத்தை எட்டும் என ஆக்சிஸ் கேப்பிடல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு வரை, இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை விட இறக்குமதி அதிகமாக இருந்த நிலையில், 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட திட்டங்களால், உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவித்ததால், 2023--24ம் நிதியாண்டில், இறக்குமதியை விட உற்பத்தி 24 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது.
==
பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு மார்ச்சில் முதலீடு கடும் சரிவு
கடந்த மார்ச்சில் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு, 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு, 25,082 கோடி ரூபாயாக சரிவை கண்டுள்ளதாக ஆம்பி வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எஸ்.ஐ.பி., வாயிலாக மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு, 4 மாதங்களில் இல்லாத வகையில், 25,926 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. குறிப்பாக, தீமெட்டிக் பண்டுகளில், கடந்த பிப்ரவரியில் 5,711.58 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த மார்ச்சில் வெறும் 170 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இது 97 சதவீதம் வீழ்ச்சி ஆகும்.
