
கச்சா எண்ணெய் கொள்முதல் அமெரிக்க சந்தையில் அதிகரிப்பு
ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மாற்றாக, அமெரிக்க, மேற்காசிய சந்தையில் டெண்டர் வாயிலாக, நம் நாட்டின் பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளன. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், எம்.ஆர்.பி.எல்., 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்துள்ளன. ரஷ்யாவின் ரோஸ்நெப்ட், லுாக்ஆயில் நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்த தடையை அடுத்து, இரு நிறுவனங்களும் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தி உள்ளன. இந்நிலையில், வரும் ஜனவரி மாதத்துக்காக, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் சந்தை, அபுதாபியின் முர்பான் சந்தையில் 40 லட்சம் பேரல்களை ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும், ஈராக்கின் பஸ்ரா சந்தையில், 10 லட்சம் பேரல்களை எம்.ஆர்.பி.எல்., நிறுவனமும் கொள்முதல் செய்துள்ளன.
அடுத்த பட்ஜெட்டுக்கு முந்தைய
ஆலோசனை கூட்டம் துவக்கம்
வரும் 2026 - -27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக, பட்ஜெட்டுக்கு
முந்தைய முதல் ஆலோசனை கூட்டம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்
நேற்று நடைபெற்றது. இதில், முன்னணி பொருளாதார நிபுணர்கள், விவசாயிகள்,
விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம்
வாயிலாக பல்வேறு துறையினரின் பரிந்துரைகள், தேவை மற்றும் துறை சார்ந்த
கருத்துகளை கேட்டறிந்து, அதனை பிரதிபலிக்கும் வகையில், பட்ஜெட்
அறிவிப்புகளை நிதியமைச்சர் தயார் செய்வது வழக்கம். வரும் பிப்ரவரி 1ம்
தேதி, 2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய
உள்ளார்.
நாட்டின் ஸ்டீல் ஏற்றுமதி
அக்டோபரில் 45% உயர்வு
கடந்த அக்டோபரில், இந்தியா நிகர ஸ்டீல் ஏற்றுமதியாளராக மாறி உள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா ஸ்டீல் உற்பத்தியாளரான இந்தியா, 60
லட்சம் டன் ஸ்டீலை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில்,
ஏற்றுமதி 44.70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், 50 லட்சம் டன்
ஸ்டீல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில்,
இறக்குமதி 55.60 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டின் கச்சா ஸ்டீல் உற்பத்தி,
9.40 சதவீதம் அதிகரித்து, 1.40 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இதே போன்று,
ஸ்டீல் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்து, 1.34 கோடி டன்னாகவும், ஸ்டீல்
விற்பனை 4.7 சதவீதம் அதிகரித்து, 1.36 கோடி டன்னாகவும் உயர்ந்துள்ளது.

