
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு வசமாகும் பெல்ரைஸ் பங்குகள்
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட், பிளாக் ராக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெல்ரைஸ் நிறுவனத்தின் 6.56 சதவீத பங்குகளை 897 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளன. பெல்ரைஸின் புரொமோட்டர் குழுவைச் சேர்ந்த சுமேத் டூல்ஸ், மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இப்பங்குகள் விற்கப்பட்டுள்ளன. எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட், 5.13 கோடி பங்குகளையும், பிளாக் ராக், 70.50 லட்சம் பங்குகளையும் பங்கு ஒன்று ரூ.153.70 விலையில் வாங்கியுள்ளன. இப்பங்கு விற்பனைக்குப்பிறகு, பெல்ரைஸிடமிருந்து சுமேத் டூல்ஸ் முழுமையாக வெளியேறிவிட்டது.
கேஸ்ட்ரால் பங்குகளை விற்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம்
பி.பி., எனும் பிரிட்டிஷ் பெட்ரோலியம், தன்வசமுள்ள கேஸ்ட்ரால் பங்குகளில் 65 சதவீதத்தை அமெரிக்கவை சேர்ந்த ஸ்டோன்பீக் நிறுவனத்துக்கு விற்பதாக அறிவித்துள்ளது. கேஸ்ட்ரால் இந்தியாவில் உள்ள 49 சதவீத பங்கு, வியட்நாம், சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட இதர நாடுகளில் உள்ள கேஸ்ட்ரால் பங்குகள் ஆகியவை இதில் அடக்கம்.
இந்த விற்பனை வாயிலாக, 54,000 கோடி ரூபாய் தொகையும், மீதமுள்ள 35 சதவீத பங்குகளுக்கான எதிர்கால டிவிடெண்ட் முன்பணம் 7,200 கோடி ரூபாயும் கிடைக்கும். பங்குகள் கைமாறிய பிறகு, ஒரு கூட்டு நிறுவனம் துவங்கப்படும். அதில் ஸ்டோன்பீக், 65 சதவீத பங்குகளையும், பி.பி., 35 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும்.
'ஹையர்' பங்குகளை வாங்குகிறது பார்தி நிறுவனம்
சுனில் மிட்டலுக்கு சொந்தமான பார்தி எண்டர்பிரைசஸ் மற்றும் வார்பெர்க் பின்கஸ் எனும் தனியார் நிதியம் ஆகிய இரண்டும் கூட்டாக இணைந்து 'ஹையர் இந்தியா' நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்குவதாக அறிவித்துள்ளன.
வீட்டு உபயோக பொருட்களை விற்கும் ஹையர் இந்தியாவின் தாய் நிறுவனமான சீனாவின் ஹையர் குழுமம், 49 சதவீதபங்குகளை வைத்து கொள்ளும்.
மீதமுள்ள 2 சதவீத பங்குகள் ஹையர் ஊழியர்களுக்கானது ஆகும். பார்தி, வார்பெக் பின்கஸ் நிறுவனங்கள் எவ்வளவு தொகைக்கு பங்குகளை வாங்கியுள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. இன்றைய நிலையில் ஹையர் இந்தியாவின் மதிப்பு 15,000 கோடி ரூபாய்.

