
பியூட்டனால் இறக்குமதிக்கு ஜூலை 12 வரை வரி நீட்டிப்பு
பெ யின்ட் மற்றும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 'என் பியூட்டனால்' எனும் சாதாரண பியூட்டனால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள பொருட் குவிப்பு தடுப்பு வரி, வரும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சாதாரண பியூட்டனாலுக்கு, கடந்த 2021 ஏப்ரலில் பொருட்குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் அதிக அளவிலான பியூட்டனால் இந்திய சந்தைகளில் குவிக்கப்படுவதாகவும், இதனால் உள்நாட்டு தொழில்துறையினர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மின் வாகன விற்பனை சரிவால்நஷ்டத்தில் தென்கொரிய நிறுவனம்
தெ ன் கொரியாவின் மிகப்பெரிய பேட்டரி தயாரிப்பு நிறுவனமான 'எல்.ஜி., எனர்ஜி சொல்யூஷன்', கடந்த டிசம்பர் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நிறுவனத்தின் நஷ்டம் கிட்டத்தட்ட 750 கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் 38,000 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4.80 சதவீதம் சரிவு. உலக அளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை குறைந்து வருவதே நஷ்டத்துக்கு காரணம் என தெரிகிறது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் நிறுவனத்தின் விற்பனை மந்தமாகியுள்ளது.
அலையன்ஸ் வசமிருந்த பங்குகள்கையகப்படுத்திய பஜாஜ் குழுமம்
'ப ஜாஜ் பின்சர்வ்' நிறுவனம், ஜெர்மனியின் 'அலையன்ஸ்' நிறுவனத்துடனான தனது 24 ஆண்டுகால கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அலையன்ஸ் வசமிருந்த 23 சதவீத 'பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ்' மற்றும் 'பஜாஜ் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனங்களின் பங்குகளை, 21,390 கோடி ரூபாய்க்கு பஜாஜ் குழுமம் முழுதாக வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பஜாஜ் பின்சர்வ் மற்றும் அலையன்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இந்நிறுவனங்கள் துவங்கப்பட்டன.
கையகப்படுத்தலைத் தொடர்ந்து, இந்த இரண்டு நிறுவனங்களில், பஜாஜ் குழுமத்தின் பங்கு 74 சதவீதத்திலிருந்து 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. அலையன்ஸ் வசம் மீதமுள்ள 3 சதவீத பங்குகளையும் வரும் ஜூலை மாதத்துக்குள் வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

