UPDATED : ஜன 24, 2026 02:35 AM
ADDED : ஜன 24, 2026 02:33 AM

சோயா எண்ணெய் இறக்குமதி ரத்து
தெ ன் அமெரிக்க நாடுகளில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இறக்குமதியாளர்கள் தெரிவித்து உள்ளதாவது:
இந்திய ரூபாய் மதிப்பு அதிக சரிவு கண்டுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. பிரேசில், அர்ஜென்டினாவில் இருந்து 35,000 முதல் 40,000 டன் சோயா எண்ணெய், பிப்ரவரி மற்றும் ஏப்ரல் -- ஜூலை காலத்தில் இறக்குமதி செய்யும் வகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட, 60 சதவீத சமையல் எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து இந்தியா வாங்குகிறது. ரூபாய் மதிப்பு சரிவால் டன்னுக்கு 2,250 முதல் 2,700 ரூபாய் வரை உள்நாட்டில் கிடைப்பதைவிட கூடுதல் செலவாகிறது. இந்த விலை வித்தியாசத்தால் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பதோடு பொருளாதார ரீதியாகவும் லாபகரமாக இல்லை. இவ்வாறு கூறினர்.
ஐ.ஏ.என்.எஸ்., செய்தி முகமை முழுதும் அதானி வசமானது
ஐ. ஏ.என்.எஸ்., செய்தி முகமையின் 100 சதவீத பங்குகளை, அதானி குழுமத்தின் ஏ.எம்.ஜி., மீடியா நெட்வொர்க் கையகப்படுத்தி உள்ளது. கடந்த 2023ல் ஐ.ஏ.என்.எஸ்., செய்தி முகமையின் 50.50 சதவீத பங்குகளை வாங்கிய அதானி குழுமம், கடந்த 2024ல் அதன் வசமுள்ள பங்குகளை 76 சதவீதமாக அதிகரித்து இருந்தது. இந்நிலையில், மீதமுள்ள 24 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாக, ஏ.எம்.ஜி., மீடியா நெட்வொர்க்ஸ் பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது. எனினும், எவ்வளவு தொகைக்கு பரிவர்த்தனை நடைபெற்றது என்ற விபரங்களை வெளியிடவில்லை.
கச்சா எண்ணெய் கொள்முதல் உத்தியை மாற்றியது ஐ.ஓ.சி.
,
பொ துத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரஷ்யாவுக்கு பதிலாக, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆங்கோலா ஆகிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்கு பிரேசிலின் பெட்ரோபிராஸ், அபுதாபியில் ஷெல், அங்கோலாவின் ஹன்கோ உள்ளிட்ட நிறுவனங்களிடம், கிட்டத்தட்ட 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியன் ஆயில் திட்டமிட்டுள்ளது.
ரூ.2,000 கோடிக்கு முதலீடு 'ஜெனரல் அட்லான்டிக்' திட்டம்
நொ றுக்கு தீனி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த 'பாலாஜி வேபர்ஸ்' நிறுவனத்தின் 7 சதவீத பங்குகளை வாங்க, உலகளாவிய தனியார் பங்கு முதலீட்டு நிறுவ னமான 'ஜெனரல் அட்லான்டிக் ' திட்டமிட்டுள்ளது. 35,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பாலாஜி வேபர்ஸ் நிறுவனத்தின் 7 சதவீத பங்குகளை, கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான இறுதி ஒப்பந்தத்தை, ஜெனரல் அட்லான்டிக் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
@subtitle@பி.எல்.ஐ., திட்டத்தில் 5 நிறுவனங்கள் தேர்வு
நு கர்வோர் மின்னணு பொருட்கள் தயாரிப்புக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ், ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிறுவனங்கள் அனைத்துமே ஏ.சி., உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில், 'கிர்லோஸ்கர் நியூமேடிக், கோத்ரெஜ் அண்டு பாய்ஸ், இந்தோ ஏசியா காப்பர், கிரையோன் டெக்னாலஜி, பிரணவ் விகாஸ்' ஆகிய 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்கள் மொத்தம் 863 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும்; 8,337 கோடி மதிப்பிலான உற்பத்தி நடைபெறுவதுடன், 1,799 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

