UPDATED : மார் 21, 2026 02:09 AM
ADDED : மார் 21, 2026 02:07 AM

எழுதுபொருள் தயாரிப்பில் லக்ஸர்- - கிரயோலா கூட்டு
எழுதுபொருட்கள் தயாரிப்பு நிறுவனமான 'லக்ஸர் ரைட்டிங் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்', அமெரிக்காவை சேர்ந்த 'கிரயோலா' நிறுவனத்துடன் இணைந்து, 'லக்ஸர் கிரயோலா' என்ற பெயரில் எழுதுபொருட்களை விற்பனை செய்ய உள்ளது.
இவை இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இ - காமர்ஸ், குயிக் காமர்ஸ் தளங்களிலும் இவை விற்பனையாகும். கிரேயான், சாக்பீஸ், மார்க்கர் உள்ளிட்ட ஓவியம் தொடர்பான பொருட்களை கிரயோலா தயாரித்து வருகிறது. இந்திய நிறுவனம் ஒன்றுடன் கிரயோலா இத்தகைய ஒப்பந்தம் செய்வது இதுவே முதல் முறை.
இரும்பு கழிவில் கட்டுமான கம்பி டாடா ஸ்டீல் தயாரிப்பு ஆலை
டா டா ஸ்டீல், லுாதியானாவில் உள்ள 'ஹைடெக் வேலி' பகுதியில் 3,200 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்புக்கழிவிலிருந்து 'டிஸ்கான்' கட்டுமானக் கம்பி தயாரிக்கும் தன் முதல் தொழிற்சாலையைத் துவக்கியுள்ளது.
இது, 'எலெக்ட்ரிக் ஆர்க் பர்னஸ்' தொழில்நுட்பத்தின்கீழ் இயங்கும் ஆலையாகும். இதன் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 7.5 லட்சம் டன்.
ஒரு டன் ஸ்டீல் தயாரிப்பின்போது 300 கிலோவுக்கும் குறைவாகவே கார்பன் கழிவு இங்கு வெளியாகும். இந்த ஆலைக்குத்தேவையான இரும்புக் கழிவுகளில், 40 சதவீதம், ஹரியானாவில் உள்ள டாடா ஸ்டீலின் மறுசுழற்சி ஆலையிலிருந்து பெறப்படும்.
