ADDED : ஏப் 01, 2026 01:32 AM

மாதந்தோறும் சராசரியாக 31 ஜி.பி., டேட்டா பயன்படுத்தும் இந்தியர்கள்
ஸ் மார்ட்போன் வைத்துள்ள இந்தியர்கள், மாதந்தோறும் சராசரியாக 31 ஜி.பி., அளவு டேட்டாவை பயன்படுத்துவதாக நோக்கியா நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 5ஜி சேவையின் அசுர வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில், 27.5 ஜி.பி., யாக இருந்த ஒரு நபரின் சராசரி மாத டேட்டா பயன்பாடு, 2025ல் 31 ஜி.பி.,யாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 18 சதவீத வளர்ச்சி.
நாட்டின் மொத்த மொபைல் டேட்டா சேவையில், 5ஜி மட்டுமே 47 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. ஓராண்டில் 5ஜி டேட்டா பயன்பாடு மட்டும் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 4கே தரத்திலான வீடியோக்களை பார்ப்பதற்கும், ஏ.ஐ, செயலிகள் பயன்பாடு, ஆன்லைன் கேமிங் விளையாட்டுகளுக்கும் அதிக டேட்டா பயன்படுத்தப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டெக்ஸ்மாகோ' நிறுவனத்துக்கு 421 கோடி ரூபாய்க்கு ஆர்டர்
ச ரக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் 'டெக்ஸ்மாகோ ரயில் இன்ஜினியரிங் நிறுவனம்' ஜே.எஸ்.டபிள்யு., குழுமத்துக்கு 421 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கும் ஆர்டரை பெற்றுள்ளது.
அதிக எடை கொண்ட கன்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் வகையில், இந்த பெட்டிகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட உள்ளன. இந்த வகை சரக்கு ரயில் பெட்டிகளால், தொழிற்சாலைகளுக்கான கன்டெய்னர் போக்குவரத்து வேகம் எடுப்பதோடு, தளவாட செலவுகளும் குறையும்.
இந்திய ரயில்வேயின் புதிய கொள்கைகளால் சரக்கு போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக டெக்ஸ்மாகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
