ADDED : அக் 31, 2025 03:39 AM

புதுடில்லி: மலேஷியாவுக்கு செல்லும் இந்திய பயணிகள் விரைவில் யு.பி.ஐ., பேமென்ட் வசதியை பயன் படுத்தி பணம் செலுத்தலாம்.
இதுதொடர்பாக, ரேசர்பே நிறுவனத்தின் மலேசிய துணை நிறுவனமான கர்லெக் மற்றும் என்.பி.சி.ஐ., இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கைகெழுத்தாகியுள்ளது.
அண்மையில் மும்பையில் நடந்த குளோபல் பின்டெக் பெஸ்ட் நிகழ்வில் இது ஏற்பட்டது.
கடந்தாண்டு மட்டும் 10 லட்சம் இந்தியர்கள் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
இதற்கு பெரும்பாலும் அன்னிய செலாவணி சந்தையில் மாற்றப்பட்ட மலேசிய ரிங்கிட் மற்றும் சர்வதேச டெபிட், கிரெடிட் கார்டுகளையே பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய பயணிகள் எளிமையான முறையில் விரைவாக பேமென்ட் செய்ய ஏதுவாக, விரைவில் யு.பி.ஐ., வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் பேமென்ட்கள், ரேசர்பே கர்லெக் தளத்தின் வாயிலாக மலேசிய வர்த்தகர்களின் கணக்கில், அந்நாட்டு கரன்சியான ரிங்கிட்டாகவே வரவு வைக்கப்படும்.

