ADDED : ஜன 06, 2026 01:18 AM

ந டப்பு நிதியாண்டில், நவம்பர் மாதம் வரையிலான முதல் எட்டு மாதங்களில், இந்தியாவின் யூரியா இறக்குமதி 120 சதவீதம் அதிகரித்து, 71.70 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாக, இந்திய உர சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் யூரியா உற்பத்தி சரிவடைந்துள்ளதால், விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில், உள்நாட்டு யூரியா உற்பத்தி 3.70 சதவீதம் குறைந்து 1.98 கோடி டன்னாக இருந்தது.
டி.ஏ.பி., உரத்தின் இறக்குமதி சார்பும் அதிகரித்துள்ளது. மொத்த டி.ஏ.பி., வினியோகத்தில் 67 சதவீதம் தற்போது இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இது கடந்த நிதியாண்டில் 56 சதவீதமாக இருந்தது.
இருப்பினும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் எஸ்.எஸ்.பி., வகை உரங்களின் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது ஒரு நம்பிக்கைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. எஸ்.எஸ்.பி., உரங்களின் விற்பனை 41.60 லட்சம் டன்னாக உள்ளது. பயிர்களுக்கு தேவையான உரங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவே, இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய உர சங்கம் தெரிவித்துள்ளது.

