ADDED : டிச 15, 2025 02:16 AM

பெங்களூரு: பஞ்சுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை முழுதுமாக நீக்க வேண்டும் என இந்திய பஞ்சு உற்பத்தியாளர் சங் கம் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
பஞ்சு இறக்குமதிக்கு வரியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விலக்கு, இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இந்த சங்கத்தின் தலைவர் வினய் என். கோடக் தெரிவித்ததாவது:
இந்திய ஜவுளித்துறை ஒரு மோசமான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. அமெரிக்க வரி விதிப்பில் உள்ள நிலையற்ற தன்மை, ஐரோப்பாவில் நீடிக்கும் மந்தநிலை ஆகியவை இதற்கு காரணம்.
தற்போது இந்தியாவில் பருத்தி உற்பத்தி குறைவாக உள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகமாக இருக்கிறது. இதனால், மற்ற போட்டி நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் பஞ்சு விலை அதிகமாக இருக்கிறது.
கொரோனா காலகட்டத் தில் வெளிநாட்டு பஞ்சுக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது.
அதனால், இப்போது ஜவுளித்துறை கடும் சவால்களை சந்திக்கிறது. எனவே, இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு மட்டும் போதாது; முழுதுமாக நீக்கினால், 2030ல் 9 லட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை அடைய அது உதவும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
