மிகச்சிறிய நிறுவனங்களுக்கு உதவ தனி துறை ஏற்படுத்த வேண்டும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
மிகச்சிறிய நிறுவனங்களுக்கு உதவ தனி துறை ஏற்படுத்த வேண்டும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2025 01:09 AM

சென்னை: சிறிய முதலீட்டில் தொழில் துவங்கியுள்ள, நானோ எனப்படும் மிக சிறிய நிறுவனங்களுக்கு உதவ, தனி துறையை ஏற்படுத்துமாறு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியிடம், தமிழக தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரிடம் கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, சென்னையில் நேற்று கேட்டறிந்தார்.
உதவி கிடைப்பதில்லை பின், அவர் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் தொழில் வணிக ஆணையரக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது:
இந்தியாவில், 7.40 கோடி சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள், 'உத்யம்' தளத்தில் பதிவு செய்துள்ளன. இதில், உற்பத்தி துறையில், 1.55 கோடி, சேவை துறையில், 2.62 கோடி நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
மீதமுள்ளவை வர்த்தக துறையை சேர்ந்தவை. இதனால், உற்பத்தி, சேவை சார்ந்த சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு போதிய உதவிகள் கிடைப்பதில்லை.
எனவே, இந்த இரு பிரிவினருக்கும் தனி போர்ட்டலை உருவாக்கி, அதன் வாயிலாக துல்லியமான புள்ளி விபரங்களை பெற்று சிறு, குறுந்தொழில்களுக்கு மட்டும் ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதிதிராவிடர் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு தலைவர் தமிழழகன் நல்லய்யம் கூறுகையில், 'பெரும்பாலான மிக சிறிய தொழில் நிறுவனங்கள், 10 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் என, குறைந்த முதலீட்டில் தொழில் துவங்கியுள்ளன.
தனி திட்டம் எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில் இருந்து, 'நானோ' எனப்படும் சிறிய முதலீடுகளில் தொழில் துவங்கிய நிறுவனங்களுக்கு தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் போல், எஸ்.சி., பிரிவு தொழில் முனைவோருக்கு தனி திட்டம் துவக்க வேண்டும்' என்றார்.
மூலப்பொருட்கள் வாங்கும் செலவில், வங்கிகள் தரும் கடனை, 75%ல் இருந்து 90% ஆக உயர்த்த கோரிக்கை

