அமெரிக்க ஆர்டர் வரத்து மந்தம் எலாஸ்டிக் உற்பத்தி 40% ஆக சரிவு
அமெரிக்க ஆர்டர் வரத்து மந்தம் எலாஸ்டிக் உற்பத்தி 40% ஆக சரிவு
ADDED : டிச 06, 2025 02:13 AM

திருப்பூர்: அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி ஆர்டர் வரத்து மந்தமானதால், எலாஸ்டிக் உற்பத்தி 40 சதவீதமாக குறைந்து விட்டதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பு மட்டும், 40 சதவீதமாக இருந்தது. இறக்குமதி வரியை 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்திய பின், அந்நாட்டில் இருந்து புதிய ஆர்டர் பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது; கைவசம் இருந்த ஆர்டர்களை மட்டும், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்துள்ளனர்.
குறிப்பாக, குளிர்கால ஆர்டர் வரத்து வெகுவாக முடங்கி விட்டது. இதனால், ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமல்லாது, சார்ந்துள்ள 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் ஸ்தம்பித்துள்ளன.
குறிப்பாக, ரப்பர் இறக்குமதி மற்றும் நுால் இறக்குமதிக்காக அதிக முதலீடு செய்த, எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் விற்பனையை தொடர முடியாமல் தத்தளிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில், ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்படும். தீபாவளிக்கு பின், ஆடை உற்பத்தி குறைந்ததால், எலாஸ்டிக் தேவையும் குறைந்து விட்டது; 'ரப்பர்' உற்பத்தி குறைந்ததன் பாதிப்பை உணர முடியாத அளவுக்கு, எலாஸ்டிக் உற்பத்தியும், தேவையும் குறைந்து விட்டது.

