'ஸ்டார்ட் அப்' குறித்த சந்தேகங்களுக்கு 'வாட்ஸாப் ' பில் தகவல் பெறும் வசதி
'ஸ்டார்ட் அப்' குறித்த சந்தேகங்களுக்கு 'வாட்ஸாப் ' பில் தகவல் பெறும் வசதி
UPDATED : ஜூன் 28, 2026 04:41 PM
ADDED : மே 16, 2026 07:13 AM
சென்னை:தமிழகத்தில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனம் தொடங்க விரும்புவோர், அதுகுறித்த சந்தேகங்களுக்கு, 'வாட்ஸாப்'பில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் வசதியை, தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவைப்படும் நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் மேற்கொள்கிறது. இதுகுறித்து அந்நிறுவன தரப்பில் கூறியதாவது:
ஸ்டார்ட் அப் சார்ந்த தகவல்களை புத்தொழில் முனைவோர் தெரிந்து கொள்ளவும், அவர்களின் சந்தேகங்களை விளக்கவும், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனத்தின் தொலைபேசி சேவை மையத்தை, 044 22256789 தொடர்பு கொள்ளலாம்.
அதில், ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மத்திய அரசின் தளத்தில் பதிவு செய்தல், தமிழக அரசின் திட்டங்கள், நிதியுதவி மற்றும் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள், முதலீட்டு நிறுவனங்கள் குறித்த தகவல் அளித்தல் உள்ளிட்டவை தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
தொலைபேசி சேவை மையத்தை அரசு வேலை நாட்களில் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். தற்போது, 'ஸ்டார்ட் அப்' குறித்த சந்தேகங்களுக்கு, இதே எண்ணில் 'வாட்ஸாப்பில்' தொடர்பு கொள்ளும் வசதியை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே உள்ள தொலைபேசி எண்ணை, 'வாட்ஸாப்' செயலி வாயிலாக, 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம். அதற்கான விளக்கங்கள் உடனுக்குடன், 'சாட்' வாயிலாக தெரிவிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
