ADDED : நவ 14, 2025 11:00 PM

புதுடில்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 27 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த அக்டோபரில் மைனஸ் 1.21 சதவீதமாக குறைந்துள்ளதாக, வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருப்பு வகைகள், காய்கறிகள், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்ததும், ஜி.எஸ்.டி., குறைப்பும் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. மொத்த விலை பணவீக்கம் முந்தைய செப்டம்பர் மாதத்தில் 0.13 சதவீதமாகவும்; கடந்தாண்டு அக்டோபரில் 2.75 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த மாதமும் உணவுப் பொருட்கள் பிரிவில் பணவாட்டமே நிலவியது. கடந்த செப்டம்பரில் 5.22 சதவீதமாக இருந்த பணவாட்டம் அக்டோபரில் 8.31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவதே பணவாட்டம் எனப்படுகிறது. எரிபொருள் மற்றும் மின்சார பிரிவுகளிலும் தொடர்ந்து ஏழாவது மாதமாக பணவாட்டமே நிலவியது.
கடந்த மாதம் வெங்காயம், உருளை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் விலை மேலும் குறைந்துள்ளது.
ஜவுளி, ரசாயனம், இயந்திரங்கள் உள்ளிட்ட தயாரிக்கப்பட்ட பொருட்களின் பணவீக்கம் 2.33 சதவீதத்திலிருந்து, 1.54 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்தாண்டின் சாதகமான அடிப்படை விளைவின் தாக்கத்தால், வரும் மாதங்களிலும் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் நிலையிலேயே தொடர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் மாதங்களிலும் மொத்த விலை பணவீக்கம், மைனஸ் நிலையிலேயே தொடர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

