தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 100 டாலரை தொட்டால் சமாளிக்குமா இந்தியா

 100 டாலரை தொட்டால் சமாளிக்குமா இந்தியா

 100 டாலரை தொட்டால் சமாளிக்குமா இந்தியா


ADDED : மார் 09, 2026 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 02:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க டந்த மாத கடைசியில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து துவக்கிய தாக்குதலுக்கு அமெரிக்கா வைத்த பெயர் 'ஆப்பரேஷன் எபிக் ப்யூரி'. 'வரலாற்று சிறப்பு மிக்க கடுஞ்சினம்' என்ற பொருள்படும் அந்த நடவடிக்கைக்கு, ஈரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் திறனை ஒழிப்பது என்று முதலில் காரணம் கூறிய அமெரிக்கா, பின்னர் ஈரான் ராணுவ வலிமையை அழிப்பது என்று கூறியது.

ஆனால், எந்த நோக்கத்துக்காக போர் துவக்கப்பட்டிருந்தாலும் சரி, அது இந்தியாவையும் மறைமுகமாக பாதிக்கும் என்பதுதான் சோகம்.

காரணம், அந்த போரால் உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில், கப்பல் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுதான்.

ஈரானுக்கும், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே அமைந்துள்ள அந்த மிக குறுகலான நீர்வழித்தடம் வழியாகத்தான், தினமும் 2 கோடிக்கும் மேலான கச்சா எண்ணெய் பேரல்கள் கடந்து செல்கின்றன.

அவற்றில் 80 சதவீதத்துக்கும் மேல், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு செல்கின்றன.

இந்தியாவில் தாக்கம் இந்தியாவுக்கு வரும் 85 சதவீத எண்ணெய், இந்த வழித்தடம் வழியாகத்தான் வந்து சேர்கிறது.

அந்த வழித்தடம் முடங்கி போய் இருப்பது, அசுர வேக வளர்ச்சிக்கான முயற்சியில் இருக்கும் நம் நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான எரிபொருளுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

இது போதாது என்று, வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், எரிவாயு விலையும் கிடுகிடுவென்று உயர்கிறது.

போர் காரணமாக, உலக எண்ணெய் விலையின் அடிப்படை குறியீடான பிரென்ட் விலை, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின், 90 டாலரை கடந்தது. இதே நிலை நீடித்தால், பிரென்ட் விலை 100 டாலரை தொடும் என்று அஞ்சப்படுகிறது.

அப்படி ஒரு நிலை வந்தால், இந்தியாவின் வருடாந்திர எண்ணெய் இறக்குமதி செலவு கிட்டத்தட்ட 2.30 லட்சம் கோடி ரூபாய் அதிகரிக்கும்.

வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்குமான வர்த்தக பற்றாக்குறை, 0.30 - 0.50 சதவீதம் உயரும். இதெல்லாம் பொதுமக்கள் தலையில்தான் விழும்.

எண்ணெய்க்கான தொகையை டாலரில் செலுத்த வேண்டி இருப்பதால், ரூபாய் மீதான அழுத்தம் அதிகரிக்கும். சந்தை ஆய்வு நிறுவனமான 'மூடிஸ்' மதிப்பீட்டின்படி, ஒரு டாலரின் மதிப்பு 93 ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சியடையலாம்.

விலைவாசி உயர்வு இதனால், இறக்குமதி செலவு அதிகரித்து, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்பு ஏற்படும். அப்படி நடந்தால், சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் விறுவிறுவென உயரும்.

அதன் எதிரொலியாக, காய்கறி துவங்கி அத்தனை அத்தியாவசிய பொருட் களின் விலைகளும் எகிறும்.

ரிசர்வ் வங்கியால் வட்டி விகிதத்தை குறைக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், வட்டி விகித்தை அதிகரித்தாலும் அதிகரிக்கலாம்.

இதனால் வங்கி கடன்களுக்கான தவணை சுமை வாடிக்கையாளர்களுக்கு அதிகமாகும்.

நிபுணர்களின் கணக்கு படி, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 100 டாலரை தொட்டால், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்துக்கும் மேல் உயரும்.

சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றாற்போல் விலையை உயர்த்தாமல், பெட்ரோல், டீசலின் விலைகளை அரசு கட்டுக்குள் வைத்திருந்தால் கூட, அது அரசின் நிதி சுமையை வெகுவாக அதிகரித்து, பணவீக்கமாக வெளிப்படும்.

நிறுவனங்கள், விண்ணை தொடும் தங்கள் தயாரிப்பு செலவை வாடிக்கையாளர்கள் மீதுதான் சுமத்துவார்கள். அப்போதும் பொதுமக்கள் விலைவாசி உயர்வால் அவதிக்குள்ளாக நேரிடும்.

வழி உண்டு ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரித்திருந்தாலும், அமெரிக்கா விலக்கு அளிப்பதாக வெளியிட்ட அறிவிப்பு இந்திய நிறுவனங்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, தற்போதைக்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அபாயகரமான அளவுக்கு உயர்ந்துவிடவில்லை. சந்தை நிபுணர்களின் கணக்கு படி, பிரென்ட் விலை 100 டாலரை தாண்டினால் தான் அது இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உடனடியாக இது நடந்தே தீரும் என்று உறுதியாக கூறிவிட முடியாது. எனவே, அதற்குள் சோர்ந்து போய்விட தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us