UPDATED : டிச 20, 2025 04:12 AM
ADDED : டிச 20, 2025 01:31 AM

நம் நாட்டில் கச்சா எண்ணெய் எங்கு கிடைக்கும் என கண்டுபிடிக்கும் பணி துவங்கி எண்ணெய் எடுக்கப்படும் வரை, இடத்துக்கான குத்தகை ஒப்பந்தம், மாநில அரசுக்கான ராயல்டி ஆகியவற்றை நிர்ணயிக்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ராயல்டி, குத்தகை இரண்டும் ஒரே பிரிவின்கீழ் இருப்பதுடன், அவற்றில் எது அதிகமோ அதை, மாநில அரசுக்கு எண்ணெய் நிறுவனம் வழங்க, பி.என்.ஜி., விதிகள் என்று அழைக்கப்படும், 'பெட்ரோலியம், நேச்சுரல் காஸ் ரூல்ஸ் - 1959' வகை செய்திருந்தது.
ஆனால், இது தற்போதைய சூழலுக்கு ஒவ்வாத, எண்ணெய் கண்டுபிடிப்பு பணியை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு வீண் செலவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
![]() |
இதையடுத்து, 1959ம் ஆண்டு பி.என்.ஜி., விதிகளை மத்திய அரசு கடந்த வாரம் திருத்தி அறிவித்துள்ளது. அதில், குத்தகை தனியாகவும், ராயல்டி தனியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக அமைந்தது, மேற்கு வங்கத்தில் ஓ.என்ஜி.சி., மற்றும் மாநில அரசு இடையேயான பிரச்னை. தலைநகர் கொல்கட்டாவில் இருந்து 50 கி.மீ., துாரத்தில், அசோக் நகர் என்ற பகுதி உள்ளது.
இங்கு கச்சா எண்ணெய் இருப்பதாகக் கருதி, கண்டறியும் பணியை ஓ.என்.ஜி.சி., நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டில் துவங்க ஆர்வம் தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில், வணிக ரீதியிலான கச்சா எண்ணெய் எடுக்க வாய்ப்பு ஏற்படுத்திய முதல் திட்டம் இது. இங்கு சோதனை உற்பத்தி, 2020 முதல் 2022 வரை நடந்தது. பக்கத்து இடங்களிலும் எண்ணெய் கண்டறியும் சோதனையில் ஓ.என்.ஜி.சி., ஈடுபட்டிருந்தது.
நின்றுபோன பணிகள் ஆனால், திடீரென இந்த பணிகள் நின்று போயின. வர்த்தக ரீதியாக கச்சா எண்ணெய் எடுக்க துவங்குவதற்கான அனைத்து பணிகளும் தயாரான நிலையில், எண்ணெய் உற்பத்தி நடைபெறவில்லை. ஓ.என்.ஜி.சி., உடன் நீண்டகால குத்தகை ஒப்பந்தம் மற்றும் ராயல்டி நிர்ணயம் குறித்த மேற்கு வங்க அரசின் நேரடி தலையீடு இதற்கு காரணமானது.
குத்தகையின் மதிப்பு, அதற்கான முத்திரை தீர்வை ஆகியவை எவ்வளவு என்பதில், ஓ.என்.ஜி.சி., உடன் மேற்கு வங்க அரசு வாதம் செய்ததில், இத்திட்டம் துவங்கப்படாமல் நின்று போனது.
இந்த இடத்தில், எண்ணெய் எடுப்பதில் குத்தகை என்ற விஷயத்தில் உள்ள சிக்கலான நிலையை அறிய வேண்டியுள்ளது. அதாவது, கடலில் எண்ணெய் எடுக்க துளையிடும் பணி மேற்கொள்ளும் நிறுவனம், மத்திய அரசிடம் குத்தகையில் கைகோர்க்க வேண்டும்.
![]() |
அதுவே, நிலப்பகுதியில் என்றால், அந்த இடம் அமைந்துள்ள மாநில அரசிடம் குத்தகைக்கு பெற வேண்டும். இதற்கு பெட்ரோலிய சுரங்க குத்தகை என்று பெயர்.
குத்தகை பெறும் நிறுவனம், எண்ணெய் கண்டுபிடிப்பு, அகழாய்வு, மேம்பாடு, தயாரிப்பு மற்றும் எண்ணெய் இயற்கை எரிவாயு விற்பனை ஆகியவற்றை செய்யலாம்.
அதாவது, அந்த இடம் வாடகை அடிப்படையில் மட்டுமே இருக்கும். ஒரு தரப்புக்கு நிலம் சொந்தம் என்றால், அதை பயன்படுத்தி கொள்ள மறுதரப்பு வாடகை செலுத்த வேண்டும். அதோடு, எடுக்கப்படும், விற்கப்படும் எண்ணெய், எரிவாயு மதிப்பில் ராயல்டியும் தர வேண்டும்.
குத்தகை காலம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன், குத்தகை மதிப்பில், நிறுவனம் முத்திரை தீர்வை, ஒருமுறை வரி ஆகியவற்றை செலுத்தி, பத்திரம் பதிய வேண்டும். இங்குதான் மேற்கு வங்கத்தின் அசோக் நகர் எண்ணெய் உற்பத்தி திட்டம் தடைபட நேர்ந்தது.
ஓ.என்.ஜி.சி., குறிப்பிட்ட குத்தகை மதிப்பை, மேற்கு வங்க அரசு ஏற்க மறுத்தது. அதிக முத்திரை தீர்வை செலுத்த கோரியதுடன், முழு குத்தகை காலத்துக்கும் வாடகையை முன்கூட்டி செலுத்த வேண்டுமென்றது.
செலவு அதிகரிப்பு இது, எடுக்கப்படாத கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ராயல்படி வழங்குவதாக ஆனது. 1959ம் ஆண்டின் விதிமுறையில், இதுபோன்ற பிரச்னையை தீர்ப்பதற்கான தெளிவான வரையறைகள் இடம்பெறவில்லை என்பது சிக்கலை அதிகரித்தது.
இதனால், திட்டப்பணிகள் தள்ளிப்போக, எதிர்பாராத தாமதத்தால் ஓ.என்.ஜி.சி.,யில் செலவு அதிகரித்தது. கண்டுபிடிப்பு மற்றும் முதற்கட்ட பணிகளுக்கு ஏற்கனவே 1,000 கோடி ரூபாய் செலவிட்ட நிலையில், வணிகரீதியான உற்பத்தியை துவங்க இயலவில்லை. இதனால், மேற்கு வங்க அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வரவில்லை.
அசோக்நகர் திட்டத்தில், ஓ.என்.ஜி.சி., கணித்துள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பு, கிட்டத்தட்ட 45,000 கோடி ரூபாய். அதன் வாயிலாக, மேற்கு வங்க அரசுக்கு கிடைக்க வாய்ப்புள்ள வருவாய் 4,500 கோடி ரூபாய்.
இதில் எதிலுமே ஒரு ரூபாய் கூட கிடைக்காத நிலைதான் அங்குள்ளது. திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களும், திட்டத்தால் தங்கள் நில மதிப்பு உயரும் என காத்திருந்த சுற்றுப்புற மக்களும் செய்வதறியாது நிற்கின்றனர்.
நம் நாட்டில் கச்சா எண்ணெய் மொத்த தேவையில் 88 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி, கடந்த ஓராண்டில் 3 சதவீதம் சரிந்திருக்கிறது.
புதிய விதிகள் ஒரே இரவில் மாற்றத்தை தந்துவிடப் போவதில்லை. நாட்டின் கச்சா எண்ணெய் இருப்பையும் அதிகரித்து விடப்போவதில்லை.
எண்ணெய் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி அதிகரிக்க இன்னும் பல காலம் ஆகலாம். ஆனால், அதற்கு பழைய விதிகள் தடைக்கற்களாக இருந்தால், அவற்றை நீக்க வேண்டியது அவசியம். அதை மத்திய அரசு தற்போது செய்துள்ளதன் பலனை எதிர்வரும் நாட்களில் காணலாம்.



