சென் னை யில் திறன் மையம் 'ஒர்க் டே' நிறுவனம் துவங்கியது
சென் னை யில் திறன் மையம் 'ஒர்க் டே' நிறுவனம் துவங்கியது
ADDED : ஜன 15, 2026 01:29 AM

சென்னை : சென்னை பெருங்குடியில், 'ஒர்க் டே' நிறுவனத்தின் சார்பில், 220 கோடி ரூபாய் முதலீட்டில் ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் பல்வேறு இடங்களில் தங்களது கிளை மற்றும் பிரிவு அலுவலகங்களை அமைக்கின்றன.
இதில், தலைமையகம் அமைந்துள்ள நாட்டுக்கு வெளியில், தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, வளர்ச்சி, வாடிக்கையாளர் சேவை போன்ற பணிகளுக்கான பிரதான அலுவலகங்களை அமைக்கின்றன.
இவ்வாறு அமைக்கப்படும் அலுவலகங்களுக்கு இணையாக முடிவுகள் எடுக்கும் அளவுக்கு திறன் கொண்ட மையங்களாக இவை அமைந்துள்ளன. சென்னையில் இத்தகைய மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஓ.எம்.ஆர்., கிண்டி ஆகிய இடங்களில் ஜி.சி.சி., அலுவலகங்கள் செயல்படுகின்றன. தற்போதைய நிலையில், பி.என்.ஒய்., மெல்லன், பார்க்லேஸ், சொசைட்டி ஜெனரல், வால்மார்ட் உட்பட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில், உலகளாவிய திறன் மையங்கள் சென்னையில் இயங்குகின்றன.
சென்னை பெருங்குடி ஆர்.எம்.இசட்., மில்லினியா வளாகத்தில் செயல்பட்டு வந்த, வால்மார்ட் ஜி.சி.சி., தற்போது பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், 4.50 லட்சம் சதுரடி வளாகத்துக்கு மாறியுள்ளது.
அந்த இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த, 'ஒர்க் டே' நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம், ஒரு லட்சம் சதுரடியில் துவங்கப்பட்டுள்ளது. இங்கு, 220 கோடி ரூபாய் முதலீட்டில், 3,000 பேர் பணிபுரிய உள்ளனர்.

