/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (9)
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (9)
ADDED : செப் 16, 2024 01:44 PM

ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர்.அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
ஆண்டுகள் ஆறு திருத்தங்கள் பல நுாறு
ஜி.எஸ்.டி., வரி நடைமுறைப்படுத்திய பிறகு, தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் சந்திக்கும் பிரச்னைகள் அளவில்லாத ஒன்று. ஆறு ஆண்டுகளில் 53 ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்கள் நடந்துள்ளன; 1,454 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களை படித்துத் தெரிந்து கொள்வது 60 வயதைத் தாண்டிய அனுபவம் மிக்க ஆடிட்டர்களுக்கே சிரமமான ஒன்று. அப்படி இருக்கையில் சாதாரண வணிகர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும்?
* ஐ.ஜி.எஸ்.டி., வரிவிகிதம் மொத்தமாக 5 சதவீதத்துக்கு மிகாமலும், உள்ளீட்டு வரியே இல்லை என்ற நிலையும் வர வேண்டும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஐ.ஜி.எஸ்.டி.,க்கு ஐ.டி.சி., என்பது நாடு முழுமைக்கும் சாத்தியமற்றது. ஒத்துப்போகாத மாதாந்திர, காலாண்டு, வருடாந்திர கொள்முதல் மற்றும் விற்று முதல் வணிகர்கள் யார் எனத் தெரியாத போது,
ஐ.ஜி.எஸ்.டி.,க்கான உள்ளீட்டு வரி பயனற்றது. இதைத் தவிர்த்தால், அரசுக்கும் இழப்பு கிடையாது.
* பஞ்சு நுால் மில் தொழில் ஒரு கூட்டுத் தயாரிப்பு. அதாவது மில்லில் உற்பத்தி செய்யப்பட்ட நுால், தறி மில்லுக்கு கச்சாப் பொருள் ஆகிறது. இந்த கூட்டுத் தயாரிப்பை உற்பத்தி செய்யும் தொழிலுக்கு, அவர்கள் கொள்முதல் செய்யும் பஞ்சுக்கோ அல்லது உற்பத்தி செய்யும் நூலுக்கோ ஏதாவது ஒன்றுக்கு ஜி.எஸ்.டி., பூஜ்யம் என்பதை நடைமுறைப்படுத்த வேண் டும். அவ்வாறு செய்தால் மட்டுமே 'மிஸ்மேட்ச்' என்ற பிரச்னை எழாது.
* வருடாந்திர ரிட்டர்ன் சமர்ப்பிக்கும்போது, ஏதாவது விடுதல் இருந்தால், ஆடிட்டர் சுட்டிக் காட்டியபடி கட்ட வேண்டியதைக் கட்டி, வருடாந்திர ரிட்டர்ன் சமர்ப்பிக்கிறோம். அதேபோன்று, ஐ.டி.சி.,யில், ஜி.எஸ்.டி., வணிகர்களுக்கு வர வேண்டி இருந்தால், நேர்முக வரி போல உடனே ரீபண்ட் செய்ய வேண்டும்.
* இ---இன்வாய்ஸ், இ-வே எடுக்க, குடியிருப்புகளில் இருந்து தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இணைப்பு (கனெக்டிவிட்டி) பிரச்னை பெரிதாக உள்ளது. இதை எளிமைப்
படுத்த வேறு மாற்று வழி தேவை.
- பி.தேவராஜ், ராஜபாளையம்.
ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in

