செபியின் 4 முக்கிய அறிவிப்புகள் சந்தைக்கு வரும் நிறுவனங்கள் ஊக்கம் பெறும்
செபியின் 4 முக்கிய அறிவிப்புகள் சந்தைக்கு வரும் நிறுவனங்கள் ஊக்கம் பெறும்
UPDATED : செப் 13, 2025 10:14 AM
ADDED : செப் 13, 2025 12:09 AM

பங்குச் சந்தைகளின் கட்டுப்பாட்டாளரான செபி, பங்குச் சந்தைக்கு வரும் நிறுவனங்களை மேலும் ஊக்கப்படும் வகையில், நான்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
1. புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிறுவனங்கள், தங்களுடைய செலுத்தப்பட்ட மொத்த பங்கு மூலதனத்தில், 5 சதவீத அளவுக்கு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்று இருந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்னர், சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடிய நிறுவனங்கள், 2.50 சதவீத அளவுக்கு தமது பங்குகளை சந்தையில் விற்பனை செய்தால் போதும்.
இதேபோல், 50,000 கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை சந்தை மதிப்புள்ள நிறுவனங்களில், சந்தைக்கு வந்ததில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள், அதன் குறைந்தபட்ச பொதுப் பங்குகளின் அளவு, 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு, இனி ஐந்து ஆண்டுகளில், இந்த இலக்கை எட்டினால் போதும்.
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்புள்ள நிறுவனங்கள், இந்த குறைந்தபட்ச பொது பங்குகளுக்கான இலக்கை, 10 ஆண்டுகளில் எட்டினால் போதும்.
ஐ.பி.ஓ. சமயத்தில், 250 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு பெறும் முக்கியமான முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சம் ஐந்தாகவு ம், அதிகபட்சம் 15 ஆகவும் இருக்கும். காப்பீடு நிறுவனங்களும், ஓய்வூதிய பண்டுகளும் கூட இனிமேல் பிரத்யேக ஒதுக்கீடு பெறும் முக்கியமான முதலீட்டாளர்களாக கருதப்படுவர். நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு, 33 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
2. பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களில் உள்ளோருடைய பொறுப்புக்களையும், எண்ணிக்கையையும் கூட, செபி தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, பங்குச் சந்தைகள், கிளியரிங் கார்ப்பரேஷன்கள், டிபாசிட்டரிகள் போன்றவையே இங்கு குறிப்பிடப்படுகின்றன. இதுபோன்ற நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில், குறைந்தபட்சம் இரண்டு நிர்வாக இயக்குனர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
3. இனிமேல், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் மற்றும் உள்கட்டுமான முதலீட்டு அறக்கட்டளைகளின் யூனிட்டுகளுக்கு, பங்குகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படும். இதன் வாயிலாக, மியூச்சுவல் பண்டுகள் இந்த அறக்கட்டளை யூனிட்டுகளை தங்களது பண்டுகளில் வாங்கிச் சேமிக்க முடியும். இதில் முதலீடு செய்வ தற்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
4. கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் இனிமேல் செபி மற்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., உள்ளிட்ட கட்டுப்பாட்டாளர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் வெளியிடும் நிதி சார்ந்த கருவிகளை மதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுவர். அதேபோல், முதலீட்டு ஆலோசகர்கள், பங்குச் சந்தை ஆய்வாளர்களாக பதிவு செய்துகொள்வதற்கான விதிமுறைகளும் கல்வித் தகுதிகளும் கூட தளர்த்தப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவர்கள் தங்களுடைய முந்தைய பரிந்துரைகள் கொடுத்துள்ள ரிட்டர்ன்களை, வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.