நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் கார்ப்பரேட் கிரெடிட் கார்டு
நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் கார்ப்பரேட் கிரெடிட் கார்டு
ADDED : அக் 19, 2025 01:56 AM

தனிநபர்கள் சொந்தமாக வாங்கிக்கொள்ளும் கிரெடிட் கார்டுகளைப் போலவே, நிறுவனங்களும் தமது பணியாளர்களுக்கு, கிரெடிட் கார்டு வாங்கிக் கொடுக்கலாம். இதற்கு 'கார்ப்பரேட் கிரெடிட் கார்டு' என்று பெயர்.
இதனால் கிடைக்கும் பயன்கள் அபரிமிதமானவை. இங்கே தனிநபர்களின் திருப்பிச் செலுத்தும் திறன் முக்கியமில்லை. மாறாக, நிறுவனத்தின் மதிப்பு, விற்றுமுதல் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக இத்தகைய கிரெடிட் கார்டுகளை வாங்கி தமது பணியாளர்களுக்குக் கொடுக்கின்றன. அவர்கள் தங்கள் வியாபார பயணங்கள், அங்கே ஏற்படும் தங்குமிட, சாப்பாட்டுச் செலவுகள், இதர செலவுகள் ஆகிய அனைத்தையும் இந்த கார்டைக் கொண்டே செய்யலாம்.
நிறுவனங்களுக்கு இதில் உள்ள சவுகரியம் என்னவென்றால், பணியாளர்களுடைய செலவுகளை நேரடியாக கண்காணிக்கலாம். அதற்கான வரையறையை வகுத்துத் தரலாம். அதீத செலவுகளை முன்னதாகவே தடுத்துவிடலாம்.
மேலும், கார்டுகளின் பயன்பாட்டுக்கு ஏற்ப கிடைக்கும் பயணச் சலுகைகள், கேஷ் பேக், ரிவார்டு பாயின்டுகள் ஆகியவை நிறுவனத்தின் சேமிப்புகளுக்கு உதவியாக இருக்கும்.
பணியாளர்கள் தரப்பில் இருக்கும் சவுகரியம் இன்னும் அதிகம். ஒவ்வொரு முறையும் ரசீதுகளைச் சேகரித்து கொண்டுவந்து அலுவலகத்தில் எழுதிக் கொடுக்க வேண்டாம்.
கார்டில் செலவு செய்யும் பணத்தை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டுமே; செலுத்தாவிடில், அபராதங்களும், பிற துன்பங்களும் ஏற்படுமே என்ற அச்சம் வேண்டாம். துணிந்து செலவு செய்யலாம்.
நிறுவனங்கள் தங்கள் பணியாளர் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு கார்ப்பரேட் கிரெடிட் கார்டுகள் நிச்சயம் உதவும்.
என்ன ஒன்று, பணியாளர்கள் இந்தக் கார்டுகளைத் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது. பணத்தை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாவிட்டால், கடுமையான அபராதங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
நிறுவனங்களின் கடன் வாங்கும் திறன் கூட இதனால் பாதிக்கப்படலாம். கட்டுப்பாடுடன் பயன்படுத்தினால் கார்ப்பரேட் கிரெடிட் கார்டும் பலன் தரும்.