UPDATED : ஜன 19, 2026 03:13 AM
ADDED : ஜன 19, 2026 03:12 AM

பணிக்காலத்துக்குப் பிறகு மீதமிருக்கும் காலத்தை கொஞ்சம் நிம்மதியாக, எந்தவிதமான சிரமமும் இல்லாமல் கழிக்க ஒருவிதமான நிதி பாதுகாப்பு வேண்டும். இதைத் தான் ஓய்வுகாலச் சேமிப்பு, அதற்கான முதலீடு என்றெல்லாம் சொல்கிறோம்.
பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு எல்லாம் போவதற்கு முன்பு, நம் நாட்டில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கமான பாதுகாப்பு கட்டமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
அதில் முதன்மையானது, 'எம்ப்ளாயீஸ் பென்ஷன் ஸ்கீம்' எனப்படும் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம். இது தான் பணியாளர்களின் வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் தரக்கூடிய திட்டம்.
முக்கிய சேமிப்பு
இந்தத் திட்டத்தை நடத்துவது அரசு. முறைசார்ந்த தொழில்களில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவருக்கும், இத்திட்டமானது, அவர்களுக்கு பணி வழங்கும் நிறுவனத்தின் வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பணியாளர் ஏதும் பங்களிப்புச் செய்ய வேண்டாம். நிறுவனங்கள், பணியாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 8.33 சதவீதப் பங்களிப்புச் செய்யும். பணியாளர் சேர்ந்தது முதல், ஓய்வு பெறும் வரை இந்தப் பங்களிப்பு தொடரும்.
இது பணியாளருக்கே தெரியாமல் நடைபெறும் முக்கியமான சேமிப்பு. இந்தத் திட்டத்துக்கு 'இ.பி.எஸ்., -- 95' என்று பெயர். இதில் என்ன ஓய்வூதியம் கிடைக்கும் தெரியுமா? இதற்கு செப்டம்பர் 2014 முதல் ஒரு சூத்திரம் பயன்படுகிறது.
மாதாந்திர பென்ஷன் = ஓய்வூதியமுடைய சம்பளம் x ஓய்வூதியமுடைய பணிக்காலம் / 70
இதில் 'ஓய்வூதியமுடைய சம்பளம்' என்பது கடந்த 60 மாதங்களில் பணியாளர் பெற்ற அடிப்படைச் சம்பளம் பிளஸ் அகவிலைப்படியின் சராசரி. 2014க்கு முன்பு, இது கடந்த 12 மாதச் சம்பளத்தின் சராசரியாக இருந்தது. இதிலும், 15,000 ரூபாய் தான் அதிகபட்ச சம்பளம் என்ற வரையறை உள்ளது.
'ஓய்வூதியமுடைய பணிக்காலம்' என்பது ஒருவர் பணியாற்றிய மொத்த பணிக்காலம். அதிகபட்சம் 35 ஆண்டுகள் என்பது வரையறை. 35 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், தனது சராசரி சம்பளத்தில் பாதியளவேனும் ஓய்வூதியமாகப் பெறவேண்டும் என்பதனால் '70' என்ற எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இப்போது கணக்குக்கு வருவோம். ஒருவர் 58 வயதில் ஓய்வு பெறுகிறார். அவருடைய 'ஓய்வூதியமுடைய சம்பளம்' அதிகபட்சமே, 15 ஆயிரம். பணிக்காலம் 28 ஆண்டுகள். 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால் 2 போனஸ் ஆண்டுகள் சேர்க்கப்படும் என்பதால் இங்கே அவருடைய பணிக்காலம் 30 என்று எடுத்துக்கொள்ளப்படும்.
ஓய்வூதியம் = ரூ. 15,000 x 30 / 70 = ரூ. 6,429 மாதந்தோறும் கிடைக்கும்.
ஆனால், இன்றைக்கு தொடர்ச்சியாக இ.பி.எஸ் 95 பென்ஷன், 1,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை என்ற தொடர் விமர்சனம் இருந்து வருகிறது. பார்லிமென்ட் நிலைக்குழு, இந்தத் தொகையை 7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்த பின்னரும், இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை.
நிரந்தர ஓய்வூதியம்
அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு முன்பு, குறைவான பென்ஷன் கிடைப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம். 2014 செப்டம்பருக்குப் பிறகுதான் அதிகபட்ச 'ஓய்வூதியமுடைய சம்பளம்' 15,000 ரூபாய் ஆயிற்று. அதற்கு முந்தைய மாதம் வரை, அது 6,500 ரூபாயாக இருந்தது.
அதேபோல், 12 மாதங்களின் சராசரி சம்பளத்தில் இருந்து 60 மாதங்களின் சராசரி சம்பளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாலும், 'ஓய்வூதியமுடைய சம்பளத்தின் அளவு குறைந்தது.
என்ன விமர்சனங்கள் இருந்தாலும், இந்த 'தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம்' நிறைய பலன்களைக் கொடுக்கவல்லது. ஒரு பணியாளரது மரணம் வரை, அவருக்கு நிரந்தரமான ஓய்வூதிய வருவாய் உண்டு. பணியாளரது மரணத்துக்குப் பின் அவரது மனைவி / கணவருக்கு பாதியளவு ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்திலும் சில சிக்கல்கள் உள்ளன. ஓய்வூதியத் தொகை மிகவும் குறைவாக இருப்பது தான் பெரிய குறை. 1,000 ரூபாயை வைத்துக்கொண்டு இந்தக் காலத்தில் மருந்து மாத்திரை கூட வாங்க முடியவில்லை என்ற ஆதங்கம் பொதுமக்கள் மனத்தில் இருக்கிறது.
அதேபோல், ஓய்வுபெறும் போது, இதில் சேர்ந்துள்ள தொகுப்பில் இருந்து ஒரு பெரிய தொகையை 'லம்ப்சம்'மாக எடுத்துக்கொள்ள முடியாது.
இன்னொரு பெரிய பிரச்னை, பணவீக்கம். 1,000 ரூபாய் என்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பு வேறு, இன்று இருக்கும் மதிப்பு வேறு. குறைந்தபட்சம், இதை கருத்தில் கொண்டு, இந்த ஓய்வூதியத் தொகையை உயர்த்தலாமே என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.
நம்பிக்கை
இதில் இருக்கும் முக்கியமான பிரச்னை, இந்தப் பணத் தொகுப்பை தனிநபராக திட்டமிட்டு, பல்வேறு இனங்களில் முதலீடு செய்து, கூடுதல் லாபம் பார்க்க முடியாது. எல்லாமே அரசின் திட்டப்படியே நடக்கும்.வயதுக்கேற்ப இதனை எப்படி பயனுடையதாக மாற்றிக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
நாற்பது வயதுக்குக் கீழே உள்ளோர், இதனை ஓர் அடிப்படை ஓய்வூதிய திட்டமாக கருதிக்கொள்ளுங்கள். இதர ஓய்வூதிய வழிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, இந்தத் திட்டத்தில் என்ன சேகரம் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வாருங்கள்.
வயது 40 முதல் 58 வரை உடையோருக்கு, இது ஒரு முக்கியமான நிதித் திட்டம். அதுவும் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோருக்கு, கணிசமான தொகை இ.பி.எஸ்.,ஸில் சேர்ந்திருக்கும். அடுத்து வரும் ஆண்டுகளில், மத் திய அரசு, இத்திட்டத்தின் ஓய்வூதிய அளவை உயர்த்தித் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அல்லது வேறு ஏதேனும் மாறுதல்கள் வருமானால், அதுவும் உங்களுக்கு பயனுடையதாக இருக்கும்.
மேலும், 58 வயதுக்குப் பிறகு, வருவதை வைத்து நிம்மதி அடையுங்கள். உங்கள் மொத்த ஓய்வூதிய திட்டமிடலில், இது ஒரு சின்ன பகுதியாக இருக்கலாம். ஆனால், இதில் உள்ள நிரந்தரத் தன்மை தான் இதன் கவர்ச்சியே.
அடுத்தடுத்த வாரங்களில், வேறு ஓய்வூதிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

