ADDED : அக் 21, 2025 12:32 AM

இந்தியாவில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுவாகவே சாதகமான மனநிலை ஏற்பட்டு வருவதால், இந்திய ரூபாயும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது. பல வாரங்களாகத் தடுமாற்றத்தில் இருந்த ரூபாய், இப்போது அதற்கு சாதகமான ஒரு போக்கை கண்டுள்ளது. இதற்குப் பின்னால், அமெரிக்க டாலரின் பலவீனம், மீண்டும் வரும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை, இந்திய ரிசர்வ் வங்கியின் நிலையான நிர்வாகம் ஆகியவை துணை நிற்கின்றன. ஒரு மாபெரும் சக்தி தள்ளாடுவது போல, அமெரிக்க டாலர் இப்போது ஆட்டம் காண தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு, வேலை நீக்கங்கள் அதிகரித்து வருவது மற்றும் நுகர்வோர் செலவினம் பலவீனமடைவது ஆகியவை டாலரின் கவர்ச்சியை குறைத்துள்ளன.
திரும்பும் முதலீடு ரூபாயின் உயர்வுக்கு பின்னால் இருக்கும் மற்றொரு முக்கிய காரணி, அன்னிய முதலீட்டாளர்களின் மனநிலை மாற்றம். கடந்த ஆறு நாட்களில், 2,217 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். மூலதனம் மீண்டும் பாயத்தொடங்கும் போது, நாணயங்களும் அதே திசையில் வலுவடையும்.
ஆர்.பி.ஐ., நடவடிக்கை இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புடன் செயல்படுவதும், ரூபாயின் பலத்திற்கு உதவுவதாக உள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரூபாயின் சீரான போக்கை பராமரிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார். எந்தவொரு குறிப்பிட்ட இலக்கையும் குறி வைக்காமல், சந்தை முடிவெடுக்க அனுமதிப்பதும், அதே நேரத்தில் திடீர் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துவதுமான இந்தச் சமநிலை அணுகுமுறை, கொந்தளிப்பான உலகச் சூழலில், ரூபாய் நிலையாகச் செல்ல உதவுகிறது.
கண்ணோட்டம் சாதகமான அலை திரும்பி வருவதால், ரூபாய் இப்போது உறுதியாக நிற்கவும், மேலும் முன்னோக்கிச் செல்லவும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
ரூபாயின் மதிப்பு, 87.50-க்குக் கீழே சென்றால், அது 86.80 - 87.00 நிலையை நோக்கிச் செல்ல வழிதிறக்கும். இது, ரூபாயின் மதிப்பு மேலும் உயரும் வாய்ப்பை சுட்டிக்காட்டுகிறது. மறுபுறம், 88.30 - 88.40 என்பது ஒரு வலுவான தடுப்பு மண்டலமாக செயல்படுகிறது.