தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/விபத்து காப்பீடு: காயமடைந்தாலே இழப்பீடு கிடைக்குமா?

விபத்து காப்பீடு: காயமடைந்தாலே இழப்பீடு கிடைக்குமா?

விபத்து காப்பீடு: காயமடைந்தாலே இழப்பீடு கிடைக்குமா?


UPDATED : நவ 14, 2026 12:00 AM

ADDED : நவ 13, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 12:00 AM ADDED : நவ 13, 2026 10:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தீபாவளி முடிந்துவிட்டது. ஆனால், பட்டாசு விபத்துகள் பற்றிய செய்திகள் நம்மை வருத்தப்பட வைத்துள்ளன. விபத்து எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். வீட்டில், சாலையில் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், தமிழகத்தில் சாலை விபத்துகளால் தினமும் சராசரியாக 53 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் இன்னும் பலர்.

தனிநபர் விபத்து காப்பீடு பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம். அரசு திட்டங்கள், பணிபுரியும் நிறுவனங்கள், வங்கிகள், சங்கங்கள் வாயிலாக குழு விபத்து காப்பீடும் நமக்கு இருக்கலாம். ஆனால் தனியாக இந்த பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வருவதில்லை.

இந்த காப்பீடு எளிமையானதாகவும் இருக்கலாம், பலவித பலன்களுடன் விரிவானதாகவும் இருக்கலாம். எதற்கு பாதுகாப்பு, எதற்கு இல்லை, செலவு எவ்வளவு, நிழல் எது, நிஜம் எது என்று பார்ப்போமா?

விலக்குகள் என்ன?



‘விபத்தில் காயமடைந்தாலே விபத்து காப்பீட்டில் இழப்பீடு கிடைக்கும்’.

இது முழு உண்மையா? ஆம் என்றும் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம்!

எல்லா விபத்துகளுக்கும் இழப்பீடு கிடைப்பதில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சட்டவிரோத செயல்கள், சில ஆபத்தான விளையாட்டுகள் போன்ற சூழல்களில் ஏற்படும் விபத்துகள் பாலிசியின் விலக்குகளுக்கு உட்படலாம். விபத்தும் அதன் விளைவுகளும் பாலிசியில் குறிப்பிடப்பட்ட பாதுகாப்புக்குள் வர வேண்டும்.

இங்கு நாம் உணர வேண்டியது, எல்லா விபத்து காப்பீடுகளும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதைத்தான். சில அடிப்படையான பாலிசிகள் விபத்து மரணத்துக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கின்றன. வேறு சிலவற்றில் கை, கால் அல்லது கண் பார்வை இழப்பு போன்ற நிரந்தர ஊனத்துக்கும் பாதுகாப்பு உண்டு.

உதாரணமாக, ‘பிரதம மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா’ திட்டத்தில் ஆண்டு பிரீமியம் 20 ரூபாய். விபத்து மரணம் அல்லது குறிப்பிட்ட முழுமையான நிரந்தர ஊனத்துக்கு (இரு கண்களின் பார்வை, இரு கை அல்லது கால்களின் செயல்பாடு, அல்லது ஒரு கண் பார்வையுடன் ஒரு கை அல்லது காலின் செயல்பாட்டை இழந்தால்) இரண்டு லட்சம் ரூபாய்; குறிப்பிட்ட பகுதியளவு நிரந்தர ஊனத்துக்கு (ஒரு கண் பார்வை அல்லது ஒரு கை அல்லது காலின் செயல்பாட்டை இழந்தால்) ஒரு லட்சம் ரூபாய்.

தரப்படுத்தப்பட்ட பாலிசி



ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வகுத்துள்ள ‘சரள் சுரக் ஷா பீமா’ என்ற தரப்படுத்தப்பட்ட தனிநபர் விபத்து காப்பீடும் உள்ளது. விபத்து மரணம், முழுமையான மற்றும் பகுதியளவு நிரந்தர ஊனம் ஆகியவை அடிப்படை பாதுகாப்புகள். முழுமையான தற்காலிக ஊனம், விபத்து மருத்துவமனை செலவு, குழந்தை கல்வி உதவி ஆகியவற்றை விருப்ப பலன்களாக சேர்க்கலாம். இந்த பாலிசியை அனைத்து பொது காப்பீட்டு மற்றும் தனி மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் வழங்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அறிவுறுத்தியுள்ளது.

பிற பாலிசிகளிலும் பல்வேறு ஊனங்களுக்கான பலன்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனி வரையறையும் இழப்பீட்டு அளவும் உண்டு. சிலவற்றில் பணிக்கு செல்ல முடியாத காலத்துக்கு வாராந்திர தொகை, மருத்துவமனை செலவு, குழந்தை கல்வி உதவி போன்றவையும் கிடைக்கும். பலன்கள் கூடும்போது பிரீமியமும் உயரும்.

ஏற்கனவே உள்ள பாதுகாப்பில் எது விடுபட்டிருக்கிறது என்று பார்த்து தேர்ந்தெடுங்கள். குழு காப்பீடு அல்லது தகுதியுள்ள வாகன உரிமையாளர் – ஓட்டுநர்களுக்கான கட்டாய விபத்து பாதுகாப்பு இருக்கலாம். அவற்றில் இல்லாத பலன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

பிரீமியம் எவ்வளவு?



அலுவலகத்தில் பணிபுரியும் 40 வயதுடைய ஒருவரை எடுத்துக்கொள்வோம். 20 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகைக்கு,

இணையத்தில் கிடைத்த மாதிரி விலைகளின்படி, விபத்து மரணம் மற்றும் முழுமையான நிரந்தர ஊனத்துக்கான ஆண்டு பிரீமியம் கிட்டத்தட்ட 1,500 – 1,800 ரூபாய். பகுதியளவு நிரந்தர ஊனம், குழந்தை கல்வி உதவியும் சேர்ந்தால் 2,200 – 2,600 ரூபாய். முழுமையான தற்காலிக ஊனத்துக்கான வாராந்திர தொகை, காப்பீட்டு தொகையின் 10 சதவீதம் வரை விபத்து மருத்துவமனை செலவு பாதுகாப்பும் சேர்ந்தால் 3,000 – 3, 800 ரூபாய் ஆகலாம்.

இவை உதாரண விலைகள்; நிறுவனத்துக்கும் பாலிசிக்கும் ஏற்ப மாறும். 22 செப்டம்பர் 2025 முதல் தனிநபர் விபத்து காப்பீட்டு பிரீமியத்துக்கு ஜி.எஸ்.டி., விலக்கு உண்டு. வயது, அபாயம் அதிகமுள்ள தொழில், சில சாகச விளையாட்டுகள் ஆகியவை காப்பீடு கிடைப்பதையும், பலன்களையும், பிரீமியத்தையும் பாதிக்கலாம்.

பல கிளைம்கள்?



விபத்து மரணம், ஊனம் ஆகியவற்றுக்கான பலன்கள் பொதுவாக முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தொகையாக வழங்கப்படும். மருத்துவ செலவு பாதுகாப்போ தகுதியான செலவுகளுக்கான ரசீதுகளின் அடிப்படையில் செயல்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விபத்து காப்பீடுகள் இருந்தால், ஒவ்வொன்றின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட பலன்களை கிளைம் செய்யலாம். சில பாலிசிகளில் கிளைம் இல்லாத ஆண்டுகளுக்கு கூடுதல் காப்பீட்டு தொகையும் சேரும்.

மருத்துவ காப்பீட்டிலும் விபத்தால் ஏற்படும் மருத்துவமனை செலவுகளை கிளைம் செய்யலாம். ஒரே மருத்துவ செலவுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகளில் இரட்டிப்பு இழப்பீடு பெற முடியாது. ஆனால் அதே விபத்துக்கு பொருந்தக்கூடிய விபத்து காப்பீட்டின் மரணம் அல்லது ஊன பலன்களையும் தனியாக கோரலாம். காப்பீட்டு உலகில் பலர் கண்ணில் படாத ஒரு மாணிக்கம் விபத்து காப்பீடு. இது நிச்சயமாக ஒரு நிஜம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us