ஐ.டி., துறையை மிரட்டும் ஏ.ஐ., 52 வார சரிவில் டி.சி.எஸ்., விப்ரோ
ஐ.டி., துறையை மிரட்டும் ஏ.ஐ., 52 வார சரிவில் டி.சி.எஸ்., விப்ரோ
ADDED : ஜூன் 12, 2026 02:26 AM

உலகளாவிய தொழில்நுட்ப பங்குகளின் வீழ்ச்சி மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல் காரணமாக, ஐ.டி., துறை பங்குகள் நேற்று சரிவை சந்தித்தன. நிப்டி ஐ.டி., குறியீடு நேற்று 3 சதவீதம் வரை சரிந்து, வர்த்தக முடிவில் 1.62 சதவீத வீழ்ச்சியுடன் 27,821 என்ற நிலையில் நிறைவடைந்தது. ஜூன் 2ம் தேதி முதல் இதுவரை இக்குறியீடு 11.50 சதவீதம் சரிவையும்; கடந்த ஆறு மாதங்களில் 27 சதவீதம் சரிவையும் கண்டுள்ளது.
கடும் விற்பனை அழுத்தம் காரணமாக, 'டி.சி.எஸ்., விப்ரோ, ஹெச்.சி.எல்., டெக் மற்றும் எல்.டி.ஐ., மைன்ட்ரீ'ஆகிய நிறுவனங்களின் பங்குகள், தங்களின் புதிய 52 வார கால மிக குறைந்த விலையை தொட்டிருக்கின்றன.
அப்ளிகேஷன் சேவைகளில் அதிக பங்களிப்பை கொண்டுள்ள 'இன்போசிஸ், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு, ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும். உட்கட்டமைப்பு மற்றும் சைபர் செக்யூரிட்டியில் கவனம் செலுத்தும் ஹெச்.சி.எல்., டெக் நிறுவனத்திற்கு பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சரிவுக்கான முக்கிய காரணங்கள்
* அமெரிக்காவில் மே மாத பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரித்தது
* வட்டி விகித உயர்வு மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக அமெரிக்க சந்தைகள் 2 சதவீதம் வரை சரிந்தது
* சர்வதேச சந்தையில் என்விடியா, பிராட்காம் போன்ற ஏ.ஐ., நிறுவன பங்குகளின் அதிகப்படியான மதிப்பீடு குறித்த கவலை
*'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் வரவிருக்கும் ஐ.பி.ஓ.,விற்காக முதலீடுகள் மாற்றப்படுவது
*'ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய 'கிளாட் பேபிள் 5, மைதோஸ் 5' ஏ.ஐ., மாடல்கள் மனிதர்களுக்கு இணையாக 'கோடிங்' செய்வதால், இந்திய ஐ.டி., நிறுவனங்களின் பாரம்பரிய அப்ளிகேஷன் வணிகமும் வருவாயும் பாதிக்கப்படும் என்ற அச்சம்.
அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் இல்லை
அமெரிக்க தொழில்நுட்ப பங்குகளின் சரிவு தீவிரமடைய வாய்ப்புள்ள நிலையிலும், இந்திய சந்தை மீது ஆர்வமில்லாத எப்.ஐ.ஐ.,கள் இங்கு பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். சர்வதேச ஏ.ஐ., பங்குகளின் மதிப்பில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டால் மட்டுமே இந்நிலை மாற வாய்ப்புள்ளதால், அதன் அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். - வி.கே.விஜயகுமார், தலைமை முதலீட்டு நிபுணர், ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
