தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ தங்க அடமானக்கடன் அடிப்படையில் பிரபலமாகும் கடன் பத்திரங்கள் நம்பி முதலீடு செய்வதற்கு ஏற்றவையா?

 தங்க அடமானக்கடன் அடிப்படையில் பிரபலமாகும் கடன் பத்திரங்கள் நம்பி முதலீடு செய்வதற்கு ஏற்றவையா?

 தங்க அடமானக்கடன் அடிப்படையில் பிரபலமாகும் கடன் பத்திரங்கள் நம்பி முதலீடு செய்வதற்கு ஏற்றவையா?


ADDED : ஏப் 17, 2026 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 12:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அண்மை காலமாக தங்க அடமான கடன்களின் அடிப்படையில் வெளியிடப்படும் தங்க பத்திரங்கள் பிரபலமாகி வருகின்றன. அட்சய திருதியை நெருங்கும் சூழலில் இத்திட்டம் குறித்து அதிகம் பேசப்படுகிறது.

என்ன வகையான முதலீடு?

தங்கத்தை அடமானமாக பெற்று, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களை தொகுத்து, அதன் அடிப்படையில் இந்த கடன் பத்திரங்களை பல நிதிநிறுவனங்கள் வெளியிடுகின்றன. இதில் முதலீடு செய்வதன் வாயிலாக, தங்க கடன்களின் வட்டி வருவாயிலிருந்து ஒரு பகுதியை லாபமாக பெறலாம் என சொல்லப்படுகிறது.

இத்தகைய பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான பாசிட்டிவ் அம்சங்களாக கூறப்படுபவை:

* இந்த வகை திட்டங்களுக்கு, ஆண்டுக்கு 9 - 12 சதவீதம் வரை வட்டி தரப்படும்

* தங்கம் பிணையாக இருப்பதால் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது

* கடன் வசூலாகாவிடில், தங்கத்தை விற்று முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்க வழிவகை உண்டு

* பொதுவாக 1 - 3 ஆண்டுகள் வரையிலான குறுகிய கால திட்டங்களாக இவை கிடைக்கும்

முதலீடு செய்யலாமா?

இத்தகைய பத்திரங்களில் முதலீடு செய்வது குறித்து 'மைஅசெட்கன்சாலிடேஷன்.காம்' நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் பார்த்தசாரதி கூறியதாவது:

மக்களை கவர்ந்திழுப்பதற்கான உத்தியாகத்தான் நான் இந்த திட்டத்தை பார்க்கிறேன். ஆனால் இதில் பல்வேறு ஆபத்துகள் இருக்கின்றன.

கடன் பத்திரங்களுக்கான தர மதிப்பீடு குறைவாக இருந்து, அதை கவனிக்காமல், இதில் பணம் டிபாசிட் செய்யப்பட்டிருந்தால், நிதி நிறுவனம் நெருக்கடியில் சிக்கும்போது, முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென குறைந்தால், அடமான தங்கத்தின் மதிப்பு, கடன் தொகையைவிட குறைய வாய்ப்புள்ளது. இது முதலீட்டாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நிதி நிறுவனம் வாடிக்கையாளரிடமிருந்து அடமானமாக பெற்ற தங்கம் போலியானதாக இருந்தாலோ அல்லது அதன் தரத்தில் குறைபாடு இருந்தாலோ, அது முதலீட்டாளருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிக ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பவர்கள், ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் பணத்தை திரும்ப பெற நினைப்பவர்கள், அல்லது வங்கி பிக்சட் டிபாசிட்டைவிட அதிக வட்டி எதிர்பார்ப்பவர்கள் இந்த வகை திட்டங்களை ஓரளவுக்கு பரிசீலிக்கலாம். ஆனால், இது மாதிரியான அதிக வட்டி தரக்கூடிய கடன் பத்திரங்களை மூத்த குடிமக்கள் எப்போதுமே பரிசீலிக்க வேண்டாம்.

இன்னொரு முக்கியமான விஷயம். தங்க கடன் பத்திர திட்டத்தை செபி கண்காணிக்கும் என்றாலும், இதன் கடன் அபாயம், சந்தை அபாயம் உள்ளிட்ட வணிக ரீதியான ரிஸ்க்குகளுக்கு செபி பொறுப்பேற்காது. எனவே, முதலீடு செய்வதற்கு முன் திட்டம் குறித்த ஆவணங்களை முழுமையாக சரிபார்ப்பது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தங்க கடன் பத்திரங்கள் - கோல்டு இ.டி.எப்., ஒப்பீடு
அம்சங்கள் தங்க கடன் பத்திரங்கள் கோல்டு இ.டி.எப்.,
அடிப்படை தங்க கடன்களை பிணையாக கொண்டது சுத்தமான தங்கத்தின் சந்தை விலை வருமானம் நிலையான வட்டி 9 -12% தங்கத்தின் விலை உயர்வை பொறுத்தது பாதுகாப்பு நிறுவனத்தின் ரிஸ்க் உண்டு 99.5% துாய்மையான தங்கம் பிணை கால அளவு 1-3 வருடங்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம் வரி உண்டு



முதலீட்டாளர்கள் கவனத்துக்கு

* கடன் பத்திரங்களின் தர மதிப்பீட்டை முதலில் சரிபாருங்கள்
* ஏ.ஏ., அல்லது அதற்கு மேலான மதிப்பீடு இருப்பது அவசியம்
* நிதி நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள், போலி தங்கத்தை கண்டறியும் திறன் மற்றும் தங்கத்தை பாதுகாக்கும் முறை ஆகியவற்றை ஆராய வேண்டும்
* முதலீடு செய்யும் தளத்தின் நம்பகத்தன்மை மற்றும் நிர்வாக கட்டணங்களை சரிபார்ப்பது அவசியம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us