கேளுங்கள்: பாலிசி பிரீமியம் செலுத்துவதில் முன்கூட்டியே கவனம் தேவை
கேளுங்கள்: பாலிசி பிரீமியம் செலுத்துவதில் முன்கூட்டியே கவனம் தேவை
UPDATED : மே 18, 2026 12:54 AM
ADDED : மே 18, 2026 12:35 AM

வணக்கம் மேடம், நான் கடந்த 22.03.2021 அன்று ஐ.சி.ஐ.சி.ஐ., பாலிசி ஒன்றில் ரூ.1,95,000 பிரீமியம் செலுத்தினேன். அதன் பிறகு குடும்ப செலவுகள், தொழில் நஷ்டம் போன்ற நெருக்கடிகளால் கடந்த நான்கு ஆண்டுகளாக (2025 வரை) என்னால் பாலிசி தவணைகளை செலுத்த முடியவில்லை.
தற்போது நிலுவையில் உள்ள நான்கு தவணைகளையும் சேர்த்து செலுத்த முன்வந்தபோது, ரூ.50,000 பிரீமியத்துக்கு 1,80,000 ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக கட்டுவது எனக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. இந்த சிக்கலிலிருந்து மீளவும், எனது பாலிசியை தொடரவும் தாங்கள் ஒரு நல்வழி காட்ட வேண்டுகிறேன்.
- மோகன்தாஸ், திருப்பூர்.
நீங்கள் எடுத்திருக்கும் பாலிசி பற்றி இன்னும் கொஞ்சம் விபரமாக தெரிவித்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும். ஏனெனில், ஆயுள் காப்பீட்டில் பல வகை பாலிசிகள் உள்ளன; ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதிமுறைகள் இருக்கும்.
முழு தகவல் தெரிந்தால் அதற்கேற்ற சரியான மற்றும் முழுமையான பதிலை அளிக்க முடியும். இதே வேண்டுகோளை கேள்விகள் அனுப்பும் அனைத்து வாசகர்களிடமும் வைக்க விரும்புகிறேன்.
உங்களின் தகவலின்படி, நீங்கள் ஓராண்டு மட்டுமே பிரீமியம் செலுத்தியுள்ளதால், இது டெர்ம் பாலிசியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டெர்ம் பாலிசி என்றால் இந்நேரம் அது முழுமையாக ரத்தாகி ('லேப்ஸ்') இருக்கும்.
பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்துவது பாலிசிதாரரின் பொறுப்பாகும். 'கிரேஸ் பீரியடு' எனப்படும் 30 நாட்கள் கால அவகாசத்திற்குள் செலுத்தினால் அபராதம் இருக்காது.
காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு, பாலிசியை மீண்டும் தொடங்க எவ்வளவு செலவாகும் என்பதற்கான 'ரிவைவல் கோட்' கேளுங்கள். அபராத கட்டணத்தை குறைக்க சொல்லி நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கலாம்.
இது யூலிப் போன்ற பாலிசியாக இருந்தால், அதில் சேர்ந்துள்ள சிறு தொகையாவது உங்களுக்கு திரும்ப கிடைக்க வாய்ப்புண்டு.
ஆனால் அதற்கு முன், இந்த பாலிசியை அப்படியே லேப்ஸ் ஆக விடலாமா என்பதையும் சிந்தியுங்கள்.
ஏற்கனவே கட்டிய பிரீமியத்தை இழப்பாக ஏற்றுக்கொண்டு, இதே நிறுவனம் அல்லது வேறு நிறுவனத்திலோ புதிய பாலிசி தொடங்குவதும் நல்ல முடிவாக இருக்கலாம்.
அப்படி செய்தால் கடந்த காலத்திற்கான பிரீமியம் மற்றும் அபராதங்களை கட்ட வேண்டியதில்லை. புதிய பாலிசியின் செலவு என்ன, பழைய பாலிசியை விட்டுவிட்டால் என்ன இழப்பு ஆகியவற்றை ஒப்பிட்டு முடிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே செலுத்திய பணம் வீணாகும் போது ஏற்படும் மனவேதனையை புரிந்து கொண்ட நீங்கள் இந்த பாலிசியை மீண்டும் செயல்படுத்தினாலும், புதிய பாலிசி எடுத்தாலும், இனிமேல் பிரீமியம் செலுத்துவதில் முன்கூட்டியே கவனமாக இருங்கள்.
வணக்கம் மேடம், யானை மிதித்து அல்லது சேதப்படுத்திய கார்களுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு கிடையாது என கேள்விபடுகிறேன். இது உண்மையா? பொள்ளாச்சி அருகே எனது அலுவலக பணிக்காக அடிக்கடி செல்ல நேரிடுகிறது. அப்போது, அங்கு என் காரை பார்க்கிங் செய்ய சற்று அச்சமாக இருக்கிறது. எனவே, இதுபற்றி விளக்கமாக கூறவும்.
-ராமசாமி பொள்ளாச்சி
மோட்டார் காப்பீட்டு பாலிசிகளில் விலங்குகளால் ஏற்படும் சேதம் அல்லது யானையால் ஏற்படும் சேதம் என்று தனியாக விலக்கு குறிப்பிடப்படுவது பொதுவாக இல்லை.
உங்கள் காருக்கு ஏற்பட்ட சேதத்தை கிளைம் செய்யும் பகுதி 'ஒன் டேமேஜ்' எனப்படுகிறது. இந்த கவர் உங்கள் பாலிசியில் உள்ளதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.
நீங்கள் 'காம்ப்ரஹென்சிவ் மோட்டார் பாலிசி' எடுத்திருந்தால், இந்த ஒன் டேமேஜ் பாதுகாப்பு அதில் அடங்கியிருக்கும். ஆனால் 'தேர்டு பார்ட்டி லையபிலிட்டி பாலிசி' மட்டும் இருந்தால், இத்தகைய சேதங்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்காது.
ஒன் டேமேஜ் பிரிவின் கீழ், வெளிப்புற காரணங்களால் திடீரென ஏற்படும் விபத்து சேதங்கள் பொதுவாக காப்பீட்டில் கவர் செய்யப்படும்.
ஆனால், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் வரம்பைத் தாண்டி வாகனம் பயன்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது 'பயன்பாட்டு வரம்புகள்' மீறப்பட்டிருந்தாலோ, அந்த சேதங்களுக்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்காமல் இருக்கலாம்.
எனவே, உங்கள் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள புவியியல் வரம்புகள் மற்றும் பயன்பாட்டு நிபந்தனைகளை கவனமாக படித்து தெளிவு பெறுங்கள். ஒவ்வொரு பாலிசியும் தனித்தன்மை வாய்ந்தது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றங்களும் இருக்கலாம்.
ஆகவே, உங்கள் பாலிசியில் விலங்குகளால் அல்லது யானையால் ஏற்படும் சேதங்களுக்கு விலக்கு அளிக்கும் ஏதேனும் குறிப்பிட்ட பிரிவு உள்ளதா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.
![]() |
காப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர்ல பெருநிறுவன வரலாற்றாசிரியர்

