ஆக்ஸிஸ் வங்கி: பன்முக வளர்ச்சியும் டிஜிட்டல் ஆதிக்கமும்
ஆக்ஸிஸ் வங்கி: பன்முக வளர்ச்சியும் டிஜிட்டல் ஆதிக்கமும்
ADDED : மே 03, 2026 12:57 AM

இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிறகு, கடந்த 1993ம் ஆண்டு, தனியார் துறை வங்கி உரிமம் பெற்ற முதல் வங்கியாக தடம் பதித்த 'ஆக்ஸிஸ் வங்கி' (அப்போது யு.டி.ஐ., வங்கி), இன்று நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தனியார் வங்கியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு 'ஆக்ஸிஸ் வங்கி' என பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் துவங்கி, தற்போது சிட்டி வங்கியின் நுகர்வோர் பிரிவை கையகப்படுத்தியது வரை, இவ்வங்கியின் வளர்ச்சி பாதை, இந்திய வங்கி துறையில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
ஒன் ஆக்ஸிஸ் கட்டமைப்பு ஆக்ஸிஸ் வங்கியின் பலமே அதன் 'ஒன் ஆக்ஸிஸ்' என்ற கட்டமைப்புதான். இது வெறும் வங்கியாக மட்டும் செயல்படாமல், தனது துணை நிறுவனங்கள் வாயிலாக ஒரு மாபெரும் நிதி நிறுவனமாக திகழ்கிறது.
'ஆக்ஸிஸ் மியூச்சுவல் பண்டு, ஆக்ஸிஸ் கேபிட்டல், ஆக்ஸிஸ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் மற்றும் ஆக்ஸிஸ் மேக்ஸ் லைப் இன்ஷூரன்ஸ்' என பல்வேறு தளங்களிலும் செயல்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டால், ஒரு வாடிக்கையாளர் வங்கி சேவைக்காக உள்ளே நுழைந்தால், அவருக்கு தேவையான முதலீடு, காப்பீடு, பங்கு வர்த்தகம் என அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்க முடிகிறது. இது வங்கியின் 'கிராஸ் செல்லிங்' திறனை அதிகரித்து, லாபத்தை நிலைப்படுத்துகிறது.
வணிக பிரிவுகள் ஆக்ஸிஸ் வங்கியின் மொத்த கடன்களில் 60 சதவீதம் சில்லரை வங்கி பிரிவில்தான் உள்ளது. இதில் வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெருநிறுவன வங்கி, 29 சதவீத பங்களிப்புடன், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் சிறு வணிகங்களுக்கு 11 சதவீத பங்களிப்புடன் துணை நிற்கிறது.
தற்போது கடன் சந்தையில் 5.78 சதவீதம் மற்றும் வைப்பு நிதி சந்தையில் 5.09 சதவீத பங்கை கொண்டுள்ள ஆக்ஸிஸ் வங்கி, 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்துள்ளது.
முக்கிய சாதனைகள் கடந்த 2023ல் சிட்டி வங்கியின் இந்திய நுகர்வோர் பிரிவை கையகப் படுத்தியது ஆக்ஸிஸ் வங்கிக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன்வாயிலாக, அதிக வருவாய் ஈட்டும் வாடிக்கையாளர்கள் ஆக்ஸிஸ் வங்கிக்கு கிடைத்தனர்.
குறிப்பாக, வங்கியின் 'பர்கண்டி' என்ற வெல்த் மேனேஜ்மென்ட் பிரிவு, 2026 நிதியாண்டு நிலவரப்படி 6.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் நிலையை எட்டியுள்ளது.
இவ்வங்கி தனது மொத்த செயல்பாட்டு செலவில் 10 சதவீதத்தை தொழில்நுட்பத்திற்காகவே ஒதுக்குகிறது. யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில் 32 சதவீதம் மற்றும் கிரெடிட் கார்டு புழக்கத்தில் 14 சதவீத பங்களிப்பை கொண்டு டிஜிட்டல் துறையில் முன்னணியில் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு மேலாண்மை அமைப்பிற்காக 'ஐ.எஸ்.ஓ.,/ஐ.இ.சி., 42001' சான்றிதழை பெற்ற உலகின் முதல் நிதி நிறுவனம் என்ற சாதனையை ஆக்ஸிஸ் வங்கி படைத்துள்ளது.
வளர்ச்சி பாதையில் வங்கியின் துணை நிறுவனமான 'ஆக்ஸிஸ் பைனான்ஸ்' தற்போது அபரிமிதமான வளர்ச்சி பாதையில் உள்ளது. 2026 ஏப்ரலில் 2,250 கோடி ரூபாய் மூ லதனத்தை திரட்ட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் ஐ.பி.ஓ., வெளியிடும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
இது, வங்கியின் ஒட்டுமொத்த மதிப்பீட்டை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டு 4வது காலாண்டு முடிவுகள்: கடந்த 2025 - 26 நிதியாண்டின் 4வது காலாண்டில் வங்கியின் சொத்து மீதான வருவாய் 1.64 சதவீதமாகவும், பங்கு மூலதன மீதான வருவாய் 15.2 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
இந்த காலாண்டுக்கான நிகர வட்டி வருவாய் 14,457 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 5 சதவீத வளர்ச்சி.
வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.62 சதவீதமாக உள்ளது. வட்டி விகித குறைப்புக்கு பிந்தைய 15 முதல் 18 மாதங்களுக்குள், இந்த வரம்பை 3.80 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொத்து - செலவு விகிதம் 2.28 சதவீதமாக குறைந்துள்ளது. இது வங்கியின் செயல்பாட்டு திறனை காட்டுகிறது.
கடன் மற்றும் டிபாசிட் 2025 - 26 நிதியாண்டில் ஆக்ஸிஸ் வங்கியின் ஒட்டுமொத்த கடன் வழங்கல் ஆண்டு அடிப்படையில் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
மொத்த விற்பனை வங்கி சேவை: மின்சாரம், ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தி துறைகளின் தேவையால் இப்பிரிவு 38 சதவீத அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது. வழங்கப்பட்ட கடன்களில் 91 சதவீதம் உயர்தர 'ஏ - ரேட்டிங்' பெற்றவை.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்: ஆண்டு அடிப்படையில் 24 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
ரீடெய்ல் வங்கி சேவை: புதிய கடன் வழங்கல் 24 சதவீதம் என்ற வலுவான அளவில் உள்ளது. குறிப்பாக, வீட்டு கடன்கள் - 28%, வாகன கடன்கள் - 25% மற்றும் விவசாய கடன்கள் - 34% என அனைத்து துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வைப்பு நிதி மேலாண்மை: வங்கியின் மொத்த வைப்பு நிதியாண்டு அடிப்படையில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புத்தொகை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. செலவு குறைப்பு: வைப்பு நிதிக்கான செலவு 46 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது வங்கியின் லாப வரம்பிற்கு வலு சேர்த்துள்ளது.
சொத்து தரம் மற்றும் முன்னெச்சரிக்கை நிதி ஒதுக்கீடு:
வங்கியின் வாராக்கடன் விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளிக்கும் விஷயம். மொத்த வாராக்கடன் 1.23 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.37 சதவீதமாகவும் உள்ளது.
இருப்பினும், வங்கி நிர்வாகம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. எதிர்கால பாதுகாப்பிற்காக 2,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை வங்கி செய்துள்ளது. இது தவிர, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப சொத்துக்களின் மதிப்பை மாற்றிஅமைத்ததால் ஏற்பட்ட வர்த்தக ரீதியான இழப்புகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
எதிர்கால கண்ணோட்டம் ஆக்ஸிஸ் வங்கி நடுத்தர காலத்தில் 12 - 14 சதவீத கடன் வளர்ச்சியை தக்கவைத்து கொள்ள திட்டமிட்டுள்ளது. 19.90 சதவீத என்ற வலுவான மூலதன இருப்பு வங்கியின் எதிர்கால விரிவாக்கத்திற்கு போதுமானதாக உள்ளது. கிளை விரிவாக்கம், டிஜிட்டல் முதலீடுகள் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவைகள் வாயிலாக தனது 1.7 - 1.8 சதவீத சொத்து மீதான வருவாயை தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
