sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'

 நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'

 நீண்டகால வளர்ச்சிக்கு தயாராகும் 'பெல்'


ADDED : மார் 29, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 01:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ந்திய பாதுகாப்பு துறையில் முன்னணி பொதுத்துறை நிறுவனமாக திகழும் பி.இ.எல்., எனும் 'பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' நாட்டின் முப்படைகளுக்கும் முக்கிய தொழில்நுட்ப ஆதரவாளராகவும், முதன்மை ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 3.28 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பும், 26,535 கோடி ரூபாய் வருவாயும் கொண்டது இந்நிறுவனம். ரேடார், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் வாயிலாக, இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

வெறும் உற்பத்தி நிறுவனமாக அல்லாமல், ஒரு திட்டத்தின் வடிவமைப்பு முதல் மென்பொருள், ஒருங்கிணைப்பு மற்றும் வாழ்நாள் பராமரிப்பு வரை முழுமையான பொறுப்பையும் ஏற்று செயல்படுவது இந்நிறுவனத்தின் முக்கிய பலமாகும்.

மின்னணு போர் முறைகள் தற்போது இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய மாற்றம் நடைபெற்று வருகிறது. பாரம்பரிய ராணுவ உபகரணங்களுக்கான செலவுகளை விட, மின்னணு மற்றும் டிஜிட்டல் அமைப்புகளுக்கான முதலீடு வேகமாக அதிகரித்து வருகிறது.

ரேடார், சென்சார், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் முறைகள் போன்ற துறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தேசிய பாதுகாப்புக்கு வழங்கப்படும் முன்னுரிமை காரணமாக, இந்த துறைக்கான முதலீடு, சுழற்சி சார்ந்ததாக இல்லாமல், நீண்டகால மற்றும் தொடர்ச்சியானதாக உள்ளது.

2014ல் 40,000 கோடி ரூபாயாக இருந்த பாதுகாப்பு உற்பத்தி, தற்போது 1.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2029ம் ஆண்டுக்குள் இதை 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்களால், உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

குறிப்பாக, பாதுகாப்பு கொள்முதல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள 'ரிபீட் ஆர்டர்' வசதி, ஏற்கனவே சோதிக்கப்பட்ட உபகரணங்களுக்கு மீண்டும் போட்டி நடத்த வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.

மேலும், வடிவமைப்பு அறிவுசார் உரிமைகள் மற்றும் முக்கிய மென்பொருள் கட்டுப்பாடுகள், இந்திய நிறுவனங்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற புதிய கொள்கை, துறையின் தற்சார்பை வலுப்படுத்துகிறது.

நிறுவனத்தின் வணிக உத்தி இந்த சூழலில், பி.இ.எல்., தனது வணிக மாதிரியை வெற்றிகரமாக மாற்றியுள்ளது. ஆரம்பத்தில் பிற நிறுவனங்களின் வடிவமைப்புகளை அடிப்படையாக கொண்டு உற்பத்தி செய்த இந்நிறுவனம், இன்று டி.ஆர்.டி.ஓ., உடன் இணைந்து, திட்டங்களை வடிவமைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

பல துணை நிறுவனங்களின் பாகங்களை ஒருங்கிணைத்து முழுமையான ராணுவ அமைப்புகளை உருவாக்கும் 'ஈகோசிஸ்டம் ஆர்கெஸ்ட்ரேட்டர்' ஆக உருவெடுத்துள்ளது.

மேலும், உற்பத்தி பணிகளில் 30 சதவீதத்தை சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ஒப்படைத்துவிட்டு, இந்நிறுவனம் உயர் தொழில்நுட்ப மின்னணு சாதனங்களில் கவனம் செலுத்துகிறது.

தொழில்நுட்ப இடைவெளிகளை நிரப்ப, 'தேல்ஸ், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ், சப்ரான்' போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

வளர்ச்சி காரணிகள் நிறுவனத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் முக்கிய அம்சம் அதன் வலுவான ஆர்டர் புத்தகமாகும். 2026ம் நிதியாண்டின் டிசம்பர் மாத நிலவரப்படி, 73,015 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் உள்ளன.

இது, அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு நிலையான வருவாயை உறுதி செய்கிறது.

'கியூ.ஆர்.எஸ்.ஏ.எம், குஷா, மிஷன் சுதர்ஸன் சக்ரா' போன்ற பெரிய திட்டங்கள் குறுகிய மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளன. மேலும், 10 ஆண்டுகளுக்கான 4,500 கோடி ரூபாய் ஒப்பந்தம் ஆண்டுதோறும் 450-500 கோடி ரூபாய் மதிப்பில் நிலையான வருவாயை வழங்குகி றது.

நிதி செயல்திறனிலும் பி.இ.எல்., வலுவாக உள்ளது. 2026ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 18.9 சதவீத வருவாய் வளர்ச்சியும்; 29.1 சதவீத மார்ஜினும் பதிவு செய்துள்ளது.

இது நிறுவனத்தின் ஆண்டு இலக்குகளை விட மேலானது. திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவேற்றும் திறன் மற்றும் உற்பத்தி திறன் மேம்பாடு இதற்கு காரணமாகும். தற்போது 73,450 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் புத்தகமும், 19,770 கோடி ரூபாய்க்கு புதிய ஆர்டர்களும் உள்ளது.

போட்டித் தரப்பில், 'டேட்டா பேட்டர்ன்ஸ், அஸ்ட்ரா மைக்ரோவேவ்' போன்ற தனியார் நிறுவனங்கள் வளர்ந்தாலும், அவை பெரும்பாலும் துணை அமைப்புகளில் மட்டுமே உள்ளன. டி.ஆர்.டி.ஓ., உருவாக்கிய பல முக்கிய ரேடார் அமைப்புகளுக்கான உற்பத்தி உரிமை இந்நிறுவனத்திடமே இருப்பது முக்கிய முன்னிலை.

மேலும், பாதுகாப்பு அமைப்புகளில் விற்பனையாளர் மாற்றம், நேரம் மற்றும் செலவு அதிகமாக இருப்பதால், பி.இ.எல்., மீது முப்படைகள் தொடர்ந்து சார்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்காலத்தில் பி.இ.எல்., நிறுவனம் 15 சதவீதத்துக்கும் மேலான வருவாய் வளர்ச்சியையும், 27 சதவீதத்துக்கும் மேலான லாப விகிதத்தையும் தொடர்ந்து பேணும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தயாரிப்பு துறைகளில் இருப்பது, பாதுகாப்பு செலவின மாற்றங்களிலிருந்து நிறுவனத்தை பாதுகாக்கிறது.

எதிர்கொள்ளும் சவால்கள் இருப்பினும், சில சவால்களும் உள்ளன. நிறுவன வருவாயின் பெரும்பகுதி பாதுகாப்பு அமைச்சகத்தை சார்ந்துள்ளது. மேலும், செமிகண்டக்டர் தேவையின் 70 சதவீதம் இறக்குமதியிலேயே உள்ளது. அதேநேரம், குறைந்த மார்ஜின் கொண்ட சிவில் துறைகளில் விரிவாக்கம், லாப விகிதத்தில் அழுத்தம் தரக்கூடும்.

மொத்தத்தில், வலுவான கொள்கை ஆதரவு, அதிகரித்து வரும் பாதுகாப்பு செலவுகள், மற்றும் தொழில்நுட்ப முன்னிலை ஆகியவை பி.இ.எல்., நிறுவனத்தை நீண்டகால வளர்ச்சிக்கு தயாராக வைத்துள்ளன.

பொறுப்பு துறப்பு:

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us